சென்னை : பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி இன்று ஊக்க உரை நிகழ்த்துகிறார். இந்த உரையை, அரசு பள்ளி மாணவர்கள் கேட்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில், பள்ளி கல்வி பாடத் திட்டம் மற்றும் மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதேபோல், ஒவ்வொரு மாநிலங்களிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப் படுகின்றன.
இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், தேர்வை அச்சமின்றியும், பதற்றமின்றியும் எழுதவும், அவர்களுக்கு ஊக்கம் தரும் நிகழ்ச்சிகள், அரசின் சார்பிலும், தனியார் சார்பிலும் நடத்தப்படுகின்றன. இந்த அடிப்படையில், பொது தேர்வு மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களுடன், பிரதமர் மோடி நேரில் உரையாட உள்ளார்.டில்லியில் உள்ள டாக்கடோரா ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், அனைத்து மாநில மாணவர்களும் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த, 66 மாணவர்களும் பங்கேற்கின்றனர். மாணவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு, பிரதமர் மோடி பதில் அளிக்கிறார். இதற்காக, பிரதமரிடம் கேள்வி கேட்கும் மாணவர்கள், தனியாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி, 'டிவி' மற்றும் சமூக வலைதளங்களில், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில், பொது தேர்வு எழுதும் அரசு பள்ளிகளின் மாணவர்கள், இந்த உரையை கேட்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.பொது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வேலை நாட்கள் குறைவாக உள்ளதால், அவர்களுக்கு இன்று முதல், மூன்றாம் பருவ பாடங்களை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.