Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் அல்லாத பிறமொழியில் தேர்வு எழுதுவோரின் விபரங்களை சேகரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை,
தமிழ் மொழி கட்டாய பாடமாகியுள்ளது. 2006ம் ஆண்டில், தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலுக்கு வந்தது. 2016ல், பத்தாம் வகுப்பு பொதுதேர்வுக்கும், தமிழ் கட்டாயம் ஆனது.ஆனால், தமிழகத்தில் படிக்கும் பிறமொழி மாணவர்கள், தமிழில் தேர்வு எழுதுவதற்கு விலக்கு பெற்றுள்ளனர். அவர்கள், தங்களின் தாய்மொழியில் மட்டுமே, தேர்வு எழுத விரும்புவதாக தெரிவித்தனர். இதற்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அதேபோன்று, பிறமொழி மாணவர்கள், ஆறாவது பாடமாக, விருப்ப மொழி தேர்வும் எழுதலாம் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை சலுகை வழங்கியுள்ளது.
இந்நிலையில், மார்ச்சில் நடக்கவுள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் மொழி இன்றி, பிறமொழிகளில் தேர்வு எழுதும் மாணவர் விபரங்களை பதிவு செய்யுமாறு, பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தேர்வு நேரத்தில் குளறுபடிகளை தடுக்கும் வகையில், எந்த மாணவர் பெயரும் விடுபடாமல், பட்டியலில் சேர்க்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.