Join THAMIZHKADAL WhatsApp Groups
புதுடில்லி: 'மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமே. இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலிருந்து பின்வாங்கும் பேச்சே இல்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, வேலுார் கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி தாக்கல் செய்த மனுவையும், தள்ளுபடி செய்தது. எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதுவது, நாடு முழுதும் கட்டாயமாக்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை எதிர்த்து, தமிழகத்தின் வேலுாரை சேர்ந்த, சி.எம்.சி., எனப்படும், கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. அதேநேரத்தில், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு மருத்துவக் கல்லுாரியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை பின்பற்றி வருகிறோம். 'எனவே, நீட் தேர்விலிருந்து எங்கள் கல்லுாரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டு இருந்தது. தெளிவான உத்தரவு இந்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதத்துக்குப் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம் என ஏற்கனவே தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பாக போதிய விவாதங்கள், ஆய்வு நடத்தியாகி விட்டது. நீட் தேர்வு நடைமுறை, நாடு முழுதும் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், ஒரு தனியார் கல்லுாரிக்கு மட்டும், அதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது.
மாற்ற முடியாது ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவருக்காக நீதிமன்ற உத்தரவை மாற்றி அமைக்க முடியாது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, மனுவை வாபஸ் பெற மனுதாரர் தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர். நீட் தேர்வை எதிர்த்து, தமிழக அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நிலுவையில் உள்ளது.