Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 20, 2020

TNPSC : குரூப்-4 தேர்விற்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிட முடிவு !


குரூப்-4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்ததாலும், அவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததாலும் மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.




இதுதொடர்பாக தேர்வர்கள் பலர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதுதவிர ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் அந்த பகுதிகளை சேர்ந்தவர்களை தவிர்த்து, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்து அங்கு தேர்வு எழுதியவர்களையும் விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.

அதன்படி, கடந்த 13-ந்தேதி காலையில் விசாரணை தொடங்கியது. சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கத்தை அளித்தனர். இந்த விசாரணை மறுநாள் அதிகாலை வரை விடிய விடிய நடத்தப்பட்டது.




சம்பந்தப்பட்டவர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் துருவித்துருவி கேள்விகள் கேட்டனர். விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தவர்களில் பெரும்பாலானோரின் பதில்கள் ஒரே மாதிரியாக இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோரின் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை மட்டும் நீக்கிவிட்டு புதிய தரவரிசை பட்டியலை வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




அறிவுத்திறன் சோதனையில் புகாரில் தொடர்புடையவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதால் முறைகேடு நடந்தது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், கீழக்கரை மற்றும் ராமேசுவரம் ஆகிய இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மீது போலீசில் புகார் அளித்து விசாரணைக்கு உட்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular Feed

Recent Story

Featured News