Tuesday, April 28, 2020

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு ரத்து - ஓராண்டு ஈட்டிய விடுப்பு ஊதியமும் இல்லை என அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வழக்க மாக பெறும் ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் ஓராண்டுக்கும், அகவிலைப்படி உயர்வை 2021-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையும் நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விடுப்பு விதிகள்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அந்த ஆண்டில் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு, ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியம் எவ்வித பிடித்தமும் இன்றி வழங்கப்படும்.
இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது.
இந்நிலையில், தற்போது கரோனா தடுப்பு பணிகளுக்காக அதிக நிதி தேவைப்படுவதால், ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்திவைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளி யிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவல் காரணமாக, நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு விடுப்பு விதிகள்படி, ஆண் டுக்கு 15 நாட்கள் அல்லது 2 ஆண்டு களுக்கு 30 நாட்கள் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களால் விண்ணப்பித்து பெறப் படும் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு முதல்கட்டமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
ஏற்கெனவே விண்ணப்பித்து நிலுவை யில் உள்ள ஈட்டிய விடுப்பு விண்ணப் பங்களுக்கு ஒப்புதல் மற்றும் விடுவித்தல் செயல்படுத்தப்படாது. ஒப்புதல் உத்தரவு வழங்கப்பட்டிருந்தாலும் அவை ரத்து செய்யப்பட்டு, அந்த ஈட்டிய விடுப்பானது மீண்டும் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் விடுப்பு கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த உத்தரவு அனைத்து அரசு கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், கூட்டுறவு அமைப்புகள் என அனைத்துக்கும் பொருந்தும்.
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப் படியையும் நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணை யில், கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், மத்திய அரசின் அறிவிப்பை முழுமையாக ஏற்று, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப் படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும் அகவிலைப்படிஉயர்வு நிறுத்திவைக்கப்படுகிறது.
நிலுவை கிடையாது
அதேபோல், இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட மாட்டாது. அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் தற்போதுள்ள அகவிலைப் படியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வழங்கப்படும். அகவிலைப்படி நிறுத்தப் பட்ட 2020 ஜனவரி 1-ம் தேதி முதல் 2021 ஜூன் 30-ம் தேதி வரையிலான காலத்துக்கு எவ்வித நிலுவைத் தொகையும் வழங்கப்படாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎப் வட்டியும் குறைப்பு
மேலும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான (ஜிபிஎப்) வட்டியையும் தமிழக அரசு குறைத்துள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வரை 7.9 சதவீதமாக இருந்த வட்டி வீதம், தற்போது ஏப்ரல் முதல் ஜூன் 30-ம் தேதி வரை 7.1 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈட்டிய விடுப்பு ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் சங்கங் களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News