கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பீலா ராஜேஷ் நேற்று கூறியதாவது:தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இதில் 364 பேர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். அதேநேரம், மாநாட்டில் பங்கேற்ற 303 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது வீட்டுக் கண்காணிப்பில் 90,412 பேர் உள்ளனர். 28 நாள் வீட்டுக் கண்காணிப்பை 5,080 பேர் முடித்துள்ளனர்.கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் 2-வது நிலையில் உள்ளது.சமூக பரவல் இல்லை.
இந்த சூழலில், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றுசிகிச்சை பெறலாம்.
அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.கரோனா வைரஸால் 411 பேர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந் துள்ளார். மற்ற அனைவரும் நலமுடன் உள்ளனர். யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை.
கரோனா வைரஸ் நோய் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். குறிப்பாக, ஒருவருக்கு இன்று செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வந்தாலும், நாளைக்கேகூட பாதிப்பு ஏற்படலாம். அதனால்தான் 28 நாள் தொடர் கண்காணிப்பு முக்கியம் என்று சொல்கிறோம்.இவ்வாறு பீலா ராஜேஷ் கூறினார்.
No comments:
Post a Comment