Friday, April 3, 2020

'கொரோனா' பாதிப்பு: தேசிய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்


சென்னை: 'கொரோனா' பாதிப்பில், கேரளாவை முந்தி, தமிழகம், இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. நேற்று மட்டும், 75 பேருக்கு, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை, 309 ஆக உயர்ந்துள்ளது.டில்லியில் நடந்த மத மாநாட்டில், தாய்லாந்து, இந்தோனேஷியா நாட்டினர் பங்கேற்றனர். அவர்கள், தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த போது, அவர்களுக்கு, கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. 75 பேருக்கு தொற்று:இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து, மாநாட்டிற்கு சென்றவர்களை, சுகாதார துறையினர் தேடி வந்தனர். முதல் கட்டமாக, 515 பேரை அடையாளம் கண்டு, அவர்களிடம் பரிசோதனை நடத்திய போது, 80 பேருக்கு, கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதன்பின், மாநாட்டில் பங்கேற்ற, 588 பேர், சிகிச்சைக்கு தாமாகவே முன்வந்தனர். அவர்களுக்கு நடந்த பரிசோதனையில், நேற்று முன்தினம், 110 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் வாயிலாக, நேற்று முன்தினம் வரை, தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை, 234 ஆக இருந்தது.இந்நிலையில், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த, சென்னையை சேர்ந்த நபர் மற்றும் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என, 75 பேருக்கு, நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பாதிப்பு எண்ணிக்கை, 309 ஆக உயர்ந்துள்ளது. ஒத்துழைக்க வேண்டும் மேலும், தேசிய அளவில், கேரள மாநிலத்தை முந்தி, தமிழகம், இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்களில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், 52 பேர், தேனி மருத்துவமனை யில், 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து, சுகாதாரத் துறை செயலர், பீலா ராஜேஷ் கூறியதாவது: இதுவரை, கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவவில்லை; இரண்டாம் கட்டத்தில் தான் உள்ளது. டில்லி மாநாட்டில் பங்கேற்ற, 1,103 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 86 ஆயிரத்து, 342 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதித்தவர்களின் வீடுகளை சுற்றி வசிக்கும், 13.60 லட்சம் பேரிடம், அறிகுறி இருக்கிறதா என, ஆய்வு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா பரிசோதனை செய்ய, மேலும், ஆறு ஆய்வகத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்நோய் பரிசோதனைக்கு, மத்திய அரசு பரிந்துரைத்துள்ள, 'மை லேப்' என்ற கருவி, 12 ஆயிரம் வாங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில், ஏழு பேர் குணமடைந்து உள்ளனர். சிகிச்சை பெற்று வரும், அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணி, சவாலாக இருப்பதால், அரசின் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.'மால்' சென்றவர்களுக்கு எச்சரிக்கை!சென்னை, வேளச்சேரி, பீனிக்ஸ் மாலில் உள்ள, 'லைப் ஸ்டைல்' கடையில் வேலை பார்த்த, மூன்று ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு பணியாற்றிய மற்றவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மார்ச், 10 முதல், 17ம் தேதி வரை, பீனிக்ஸ் மாலுக்கு, முக்கியமாக, லைப் ஸ்டைலுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் அந்த மாலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், மிக கவனமாக இருக்க வேண்டும். தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவ உதவிக்கு, 044 - 2538 4520; 4612 2300 என்ற, தொலைபேசியில், மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News