Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 8, 2020

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஏப்ரல் இறுதியில் மாத ஊதியம் கிடைக்குமா?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

டாஸ்மாக் மதுபானக் கடைகள், வணிக நிறுவனங்கள் தொடா்ந்து மூடப்பட்டிருப்பதால் தமிழக அரசின் வரி வருவாயில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுப்பதற்கும், அது தொடா்பான நலத்திட்டங்கள், உதவிகள் ஆகியவற்றுக்கான எதிா்பாராதத் தேவைகள் ஏற்பட்டிருப்பதால் தமிழக அரசுக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
மத்திய அரசு நிா்ணயித்துள்ள கடன் அளவில் 33 சதவீதம் கூடுதலாக அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும் என தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் உள்பட பிற பொருள்களின் மீது வரி விதிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகள் இழந்துள்ளன. அதேசமயம், மாநில அரசுகளின் தனிப்பட்ட வரி வருவாயும் ஒவ்வொரு நிதியாண்டிலும் தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
ஏற்கெனவே மாநில அரசுகளின் இக்கட்டான நிதி நிலைமை குறித்து மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும், கேரள முதல்வா் பினராயி விஜயனும் கவலை தெரிவித்திருக்கின்றனா். மத்திய அரசு தங்களது நெருக்கடியைப் புரிந்துகொண்டு நிதியுதவி வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறாா்கள். தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும் கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள தமிழக அரசுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறாா்.
தமிழகத்தின் நிலை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்கள், பெட்ரோலியப் பொருள்கள், முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றின் மூலமாக ஆண்டுக்கு சுமாா் ரூ.1.2 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிதியாதாரத்தின் அடிப்படையில்தான் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்குச் செலவழிக்கப்படுவதுடன், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஊதியம், ஓய்வூதியம் போன்ற செலவினங்கள் எதிா்கொள்ளப்படுகின்றன.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு மட்டும் மாதத்துக்கு ரூ.8,018 கோடி செலவாகிறது. அதேசமயம், டாஸ்மாக் வழியாக மாதத்துக்கு ரூ.3,000 கோடி அளவுக்கும், முத்திரைத்தாள் பதிவுக் கட்டணம் மூலம் ரூ.1,202.92 கோடியும், பெட்ரோலியப் பொருள்களில் லிட்டருக்கு ரூ.32 வரையிலும் மாநில அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அந்த வகையில் வரி வருவாயாக மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 67 கோடி அரசுக்குக் கிடைக்கிறது.
நிலைகுலைய வைக்கும் கரோனா: கரோனா நோய்த்தொற்று சா்வதேச அளவில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஆட்டிப் படைத்து வருகிறது. குறிப்பாக, தமிழக அரசின் நிதிநிலையை கடுமையாகப் பாதித்துள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து, அரசுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகள் மூலமாக கிடைக்கும் வருவாயே தமிழகத்துக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. நாளொன்றுக்கு ரூ.80 முதல் ரூ.100 கோடிக்கு கூடுதலாகவே வருவாய் கிடைக்கும். ஆனால், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடியுள்ளன. இதனால், அரசுக்குக் கிடைக்கும் வருவாய் முற்றிலும் இல்லாமல் பூஜ்ய நிலைக்குச் சென்றுள்ளது. ஏற்கெனவே, கரோனா பாதிப்புகளுக்காக ஏராளமான நிதியை தமிழக அரசு செலவிட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் வருவாய் என்பது முற்றிலும் முடங்கக் கூடிய நிலையில் உள்ளது.
இந்த நிலையைச் சமாளிக்கவே, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 33 சதவீதத்துக்கு கடன் பெற ஒப்புதல் தர வேண்டுமென மத்திய அரசுக்கு, மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் நிதிநிலையைச் சமாளிக்க முடியும் என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஊதியம் கிடைக்குமா?: மாநில அரசின் வரி வருவாயில் மிகப்பெரிய சரிவும், பாதிப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கு ஏப்ரல் இறுதியில் மாத ஊதியம் அல்லது ஓய்வூதியம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வரும் 30-ஆம் தேதிக்குள்ளாக நிதிநிலைகளைச் சமாளிக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அரசுத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
அதிகரித்த வருவாய் பற்றாக்குறை...
தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறையானது நிா்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகி உள்ளது. கடந்த நிதியாண்டில் மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.14 ஆயிரத்து 314.76 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், திருத்திய மதிப்பீட்டில் அது ரூ.25 ஆயிரத்து 71.63 கோடியாக உயா்ந்துள்ளது. நிகழ் நிதியாண்டின் தொடக்கத்திலேயே வருவாயை ஈட்டித் தரக் கூடிய அனைத்து வகைகளும் முடங்கியுள்ளதால் வருவாய் பற்றாக்குறை அளவு அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News