வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் அறிக்கையில், " தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பரவி வரும் வைரசை தடுக்க உரியவழி சமூக விலகல் மட்டுமே. ஆனால் மக்கள் இதனை அலட்சியப்படுத்தி வழக்கம் போலவே நடமாடுகின்றனர். இது மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமைகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு பொது மருத்துவமனைகள், 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். அனைவரின் நலனையும் கருதி வேலூர் மாவட்டத்தில் டெலிமெடிசின் என்ற முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி புறநோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வராமல் டாக்டர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவலை எழுத்துப்பூர்வமாக அனுப்பி தங்களது உடல்நலக்குறைவிற்கான மருந்து, மாத்திரைகளை டாக்டர்களிடம் பதில் தகவல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
டாக்டர்களை செல்போனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அவர்களின் பணி நிமித்தம் காரணமாக எடுக்காமல் இருந்தால் அவர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பலாம். குறிப்பிட்ட நேரங்களில் தேவைப்பட்டால் மட்டும் டாக்டர்கள் நோயாளிகளை வாட்ஸ் அப் வீடியோ அழைப்பின் மூலமாக தொடர்பு கொள்வார்கள். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்களின் செல்போன் எண்கள் மாவட்ட கலெக்டரின் https://vellore.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment