Thursday, April 16, 2020

வாட்ஸ்-அப் குழு உருவாக்கம்: பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்


சென்னை, ஏப்.16- பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். இதனை கண்காணிக்க சொல்லி பெற்றோரையும் ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆன்லைனில் ஆசிரியர்கள் பாடம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. அதேவேளை 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
தற்போது அரசு தேர்வுகள் எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால் பள்ளிகள் திறந்தபிறகு மாணவர்கள் தேவை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர்க்க தனியார் பள்ளிகள் சார்பில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் முறை தொடங்கி உள்ளது.
பெற்றோர் கண்காணிப்பில்...
பெரும்பாலான பள்ளிகள் சார்பில் பிரத்யேக செயலி (ஆப்) உருவாக்கப்பட்டு அதன் வழியே ஆசிரியர்கள், மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடுகின்றனர். செல்போன், லேப்டாப் உதவிகொண்டு இந்த கலந்துரையாடல் நீடிக்கிறது. மேலும் வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. மேலும் வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டு அதன் வழியே மாணவர்களுக்கு வினாக்கள் அனுப்பப்பட்டு, விடைகள் எழுதும் மாணவர்களை கண்காணித்து விடைத்தாளை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைக்கும் பொறுப்பு பெற்றோருக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை பெரவள்ளூரை சேர்ந்த பிளஸ்-1 மாணவி எஸ்.நிவேதா கூறுகையில், “விடுமுறையிலும் எங்கள் நலன் கருதி பள்ளி நிர்வாகம் இதுபோல முயற்சியை மேற்கொள்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. இதனால் தொடர்ந்து ஆசிரியருடன் எங்கள் தொடர்பு நீடிக்கிறது. பல்வேறு சந்தேகங்கள் குறித்தும் உடனுக்குடன் விவாதிக்க முடிகிறது” என்றார்.
மழலையர் பள்ளிகளில்...
மழலையர் பள்ளிகளிலும் இந்த போக்கு நீடிக்கிறது. மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு மழலையர் பள்ளி ஆசிரியர்கள் பாடல்கள், விலங்குகள், பறவைகள் படங்கள், ஆடல் பாடல்களை அனுப்பி வைக்கிறார்கள். இதனை குழந்தைகளுக்கு காட்டி அவர்களது செயல்பாடுகளையும் வீடியா எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்ப சொல்கிறார்கள்.
இதுதொடர்பாக திருமங்கலத்தை சேர்ந்த ஆசிரியை ஜெய்ஸ்ரீ கூறுகையில், “மழலையர்களுக்கு இந்த விடுமுறை காலத்தை பயனுள்ளதாக அமைக்க விரும்புகிறோம். அதேவேளையில் பெற்றோரின் பொறுப்பையும் எடுத்துரைக்கிறோம். தினமும் உடல் உறுப்புகள், நிறங்கள், வடிவங்கள், விலங்குகள், பறவைகள் குறித்த வீடியோக்களை பெற்றோருக்கு அனுப்பி அதை பிள்ளைகளுக்கு காட்ட சொல்கிறோம். நாங்களும் அடிக்கடி செல்போனில் மழலையர்களுடன் பேசுகிறோம். அப்போதுதான் பிள்ளைகள் அதை நினைவில் வைத்திருப்பார்கள்”, என்றார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News