Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 8, 2020

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிக்கை !

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (ஏப்.7) வெளியிட்ட அறிக்கையில், "மனித சமூகத்தை அச்சத்தில் உறையச் செய்திருக்கின்ற கரோனா கிருமியை எதிர்த்து உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம்.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் கரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாக மடியும் நிலையைக் காணும்போது நெஞ்சம் நடுங்குகிறது. அதுபோன்ற துயரப் பள்ளத்தாக்கில் நமது நாடும் விழுந்துவிடக் கூடாது.
கரோனாவை வெற்றி காண்பது நம் கைகளில்தான் உள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிப்போம்; வீட்டிலேயே தனித்திருப்போம்; கரோனா தொற்று பரவாமல் மக்களின் உயிரைக் காப்போம்! என்ற உறுதியை மேற்கொள்ள தமிழக மக்களை அன்புடன் மீண்டும் வேண்டுகிறேன்.
இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளிப் போனதால், தேர்வு எழுத துடித்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் துவண்டு விட்டனர்.
துள்ளி விளையாட வேண்டிய இளம் பிஞ்சுகள், ஊரடங்கு உத்தரவால் மன உளைச்சலுக்கு உள்ளாகி முடங்கிக் கிடக்கின்றனர்.
பொதுத்தேர்வு என்ன ஆகுமோ? என்று மாணவர்களின் பெற்றோரும் தவியாய் தவிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களின் கல்வித் திறனை அடுத்தடுத்த 11 ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே, தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News