2019 டிசம்பர் இறுதிநாள் வூஹானில் கொரோனாவாம் என்று செய்திகளில் படித்து கடந்து சென்ற யாரும், கொரோனா நமது தெருவிலும் கட்டையப்போட்டு வழிமறிக்கும் என நினைத்திருக்க மாட்டோம்.
கண்ணுக்குத் தெரியாத வைரஸ் அனைத்துத் தொழில்களையும் புரட்டிப் போட்டது போல் ஆண்டுக்கு பலகோடிகளில் புரளும் கல்வித் தந்தைகளின் தனியார் பள்ளி தொழிலையும் கடுமையாக பாதித்தது.
தனியார் பள்ளிகளின் பதினோராம் வகுப்பு அட்மிசனுக்காகவே பத்தாம் வகுப்புத் தேர்வை கொரோனாவோடு எழுதவேண்டும் என்று அவசரப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
மக்களின் வருமானம் அடியோடு சரிந்ததால் தனியார் பள்ளிக்கு கடன வாங்கியாவது மஞ்சள் நிற வாகனத்தில் அனுப்பிய பெற்றோர்கள் இந்த ஆண்டு அரசுப்பள்ளியை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையெல்லாம் கணக்குப்போட்டு கூட்டிக்கழித்துப் பார்த்த கல்வித் தந்தைகள் இந்த ஆண்டு கட்டண உயர்வு கிடையாது என அறிவித்துள்ளனர்.
கட்டண உயர்வு இல்லை என்றாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதை தடுக்க இயலாது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து ஆசிரியர்கள் வேலைவாய்ப்புப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை நுழைவுத்தேர்வு எழுதவைத்து தனியார் பள்ளிகள் இலவசக்கல்வி அளிப்பது, உசேன் போல்ட்டுகளை பொறுக்கி எடுத்து ஓடவைப்பது போலாகும். எனவே பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்தி அரசுப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment