Wednesday, May 20, 2020

அரசு உத்தரவு மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் , கொரானா தீநுண்மி பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துவகைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்தும் , அனைத்துவகைப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணாக்கர்களுக்குத் தேர்ச்சி வழங்க அறிவுறுத்தியும் , மேலும் பல வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் அனைத்துவகைப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து , அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பள்ளித் தேர்ச்சிப் பதிவேட்டிடல் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர்நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் , பள்ளிகளை மீண்டும் திறந்ததும் , ஏற்கனவே படித்த பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்கப்படும் என்றும் சில தனியார் பள்ளிகளால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும் தெரியவருகிறது.
அரசால் அனைத்துவகைப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்புமுதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி சில மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்கள் அவ்வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வுவைத்து அதனடிப்படையில் தேர்ச்சி வழங்குவது என்பது அரசின் ஆணையினை மீறிய செயலாகும்.
இதுவிவரம் மிகக் கடுமையாக நோக்கப்படும் என்றும் , விதிகளின்படி உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் அதன் விவரத்தினை ஒரு வாரகாலத்திற்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்கவும் தெரிவிக்கலாகிறது.



1 comment:

  1. அரசு உத்தரவு மீறும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்பவர்கள் பல பள்ளிகள் பாதி சம்பளம் மட்டுமே வழங்கி வருகின்றன.சில பள்ளிகளில் அதுவும் இல்லை.அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க பட்டது? அவ்வாறு தர முடியாததற்கு பள்ளி கட்டணம் பாக்கி இருக்கிறது விசாரித்தார்களா?

    ReplyDelete

Popular Feed

Recent Story

Featured News