சேலம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக, பள்ளிகளில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமை முகாம்களை சமூகநல கூடங்களுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஐசோலேசன் வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கொரோனா அறிகுறி உள்ளவர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இதேபோல், வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த அனைத்து மாவட்ட எல்லைப் பகுதிகளிலும், ஒவ்வொரு தாலுகா அளவிலும் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிகளில் தனிமை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது.
இதனிடையே, கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, ஒரு தேர்வறைக்கு 10 மாணவர்களை மட்டும் அமர வைத்து தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தேர்வு மையங்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில், கொரோனா தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பதால், தற்ேபாது அங்குள்ள தனிமை முகாம்களை, அருகில் உள்ள சமூகநல கூடங்களுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், தனிமை முகாம்களை மாற்றியமைத்து, பள்ளிகளை ஒப்படைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment