Saturday, May 16, 2020

பொதுத்தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவர்கள்: உளவியல் ஆலோசகர்கள் ஆலோசனை

உடுமலை:பொதுத்தேர்வு குறித்து, மாணவர்களை பெற்றோர் பயப்படுத்தினால், தேர்வுக்கு தயாராக இருப்பவர்களுக்கும் மனதளவில் பாதிப்பு ஏற்படும் என, உளவியல் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.'கொரோனா' பாதிப்பை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்படவில்லை. இரண்டு மாத கால இடைவெளிக்கு பின்னர், தற்போது, ஜூன் மாதம், பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால் விடுமுறையில் இருந்த மாணவர்கள் தற்போது பதட்டமடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை, படிப்பதற்கும், தேர்வுக்கு முழுமையாக தயாராக வேண்டும் என கட்டாயப்படுத்தினால், மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என, உளவியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.உளவியல் ஆலோசகர் ஒருவர் கூறியதாவது: மாணவர்கள் பலரும் தேர்வு நடத்தப்படாது என்ற அவநம்பிக்கையில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால், தேர்வு குறித்து எந்த சிந்தனையும் அவர்களுக்கு இருந்திருக்காது.மேலும், 'கொரோனா' பதட்டத்தால், பல வீடுகளிலும், மாணவர்களுக்கு தேர்வுக்கான தொடர் பயிற்சி அளிப்பதற்கும் வாய்ப்பில்லை. இந்நிலையில், இன்னும், சில நாட்களில் பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மனதளவில் பயத்தை ஏற்படுத்தியிருக்கும்.மாணவர்களை முதலில் அந்த மன பயத்திலிருந்து விடுவித்து, தன்னம்பிக்கையை ஏற்படுத்துங்கள். மாணவர்களை அவசரப்படுத்தாமல், அவர்கள் படித்திருப்பதை, நிதானமாக மீண்டும் தயார்படுத்த சொல்லலாம். சத்தான உணவுகளை வழங்க வேண்டும். மேலும் கொரோனா குறித்து முழுமையான புரிதலை ஏற்படுத்தி, பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News