சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதித்த பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவீர்கள் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. எனினும் மாணவர்களின் நலன் கருதி,ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். ஆனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலை மாதத்திற்கு மாற்றம் செய்ய கோரி இந்திய மாணவர் பேரவை அமைப்பு நிர்வாகி மாரியப்பன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ஜூலையில் நடத்தப்பட உள்ளது என்றும் கல்லூரி தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவே இல்லாத நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு அவசர அவசரமாக நடத்தப்படுவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த வழக்கு இன்று எம்.எம். சுந்தரேஷ், பி.டி. ஆஷா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் 10ம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு நடத்தப்படும் என்று பதில் அளித்தார். இதனை கேட்ட நீதிபதிகள், கொரோனா அதிகமாக உள்ள பகுதிகளில் எப்படி தேர்வு மையங்களை அமைத்து தேர்வு நடத்த போகிறீர்கள் என்றும் வெளியில் இருந்து மாணவர்கள் எப்படி கொரோனா கட்டுப்படுத்த பகுதியில் உள்ள மையங்களுக்கு வர முடியும் என்றும் வினவினர். இது குறித்து பள்ளிக்கல்வித் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.முன்னதாக ட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கூடாது என மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment