Thursday, May 14, 2020

புகை பிடிப்போரை எளிதில் கொல்லும் கொரோனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

புகை பிடிப்போருக்கு கொரோனாவால் ஆபத்து ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கண்ணுக்கு தெரியாத கொலைகார வைரசான கொரோனா வைரஸ், உலகமெங்கும் 2 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்றுள்ளது.
இது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன.
ஆனால் இந்த கொரோனா வைரசை விட மோசமான ஒன்று புகையிலை. புகையிலையை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் ஆபத்துதான்.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை 80 லட்சத்துக்கும் அதிகமானவர்களை கொல்கிறது. இதில் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரடியாக கொல்லப்படுகிறார்கள். 12 லட்சம் பேர், புகை பிடிக்காத நிலையில், புகை பிடிப்பவர்களால் வெளியிடப்படுகிற புகையை சுவாசிக்க நேர்ந்து அதனால் ஏற்படுகிற பாதிப்புகளால் மரணம் அடைய நேரிடுகிறது.
அந்த வகையில் புகை பிடிப்பது, சுவாச நோய்த் தொற்றுகள் மற்றும் சுவாச நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.
கடந்த மாதம் 29-ந்தேதி உலக சுகாதார நிறுவனத்தால் கூட்டப்பட்ட வல்லுனர்கள், புகை பிடிப்பது தொடர்பான ஆய்வு அறிக்கையை அலசி ஆராய்ந்தனர்.
அதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி உள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகிறபோது, பீடி, சிகரெட் புகைப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயால் கடுமையான பாதிப்பு ஏற்படும். கொரோனா வைரஸ் தொற்று நோய், முதன்மையாக நுரையீரலைத்தான் தாக்குகிறது. புகை பிடித்தல் நுரையீரல் செயல்பாட்டை பாதிக்கிறது. இதன் காரணமாக புகை பிடிப்பவர்களால் கொரோனா வைரஸ்களை எதிர்த்து போராடுவது கடினம்.

* இதயநோய், புற்றுநோய், சுவாசநோய்கள், நீரிழிவு ஆகியவற்றுக்கு புகையிலை ஒரு பெரிய ஆபத்து காரணி ஆகும். இப்படிப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிறபோது, மிகுந்த பாதிப்புக்கு ஆளாவார்கள். புகை பிடிப்பவர்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பதுடன் மரணம் அடையவும் நேர்கிறது.

* புகையிலை அல்லது நிகோட்டின் பயன்பாடு கொரோனா வைரஸ் தாக்குதல் ஆபத்தை குறைக்கும் என்ற நிரூபிக்கப்படாத தகவல்கள் பரப்பப்படுகிறபோது, ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், ஊடகங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா வைரசை தடுப்பதில் புகையிலை அல்லது நிகோட்டினுக்கு பங்கு உண்டு என்பதை உறுதிப்படுத்த தற்போது போதுமான தகவல்கள் இல்லை.

* புகை பிடிப்பவர்கள் அதை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணமில்லா தொலைபேசி சேவை, மொபைல் தகவல் பரிமாற்ற சேவை, நிகோட்டின் மாற்று சிகிச்சைகள் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

* புகை பிடிப்பதை நிறுத்திய 20 நிமிடங்களில் இதய துடிப்பு, ரத்த அழுத்தம் குறைகிறது. ரத்த ஓட்டத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு குறைகிறது. 2-12 வாரங்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. 1-9 மாதங்களில் இருமல், மூச்சு திணறல் குறைகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News