Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்து அரசு உத்தரவிட்டதால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, மார்ச் 27ம் தேதி தொடங்க இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டன. அதேபோல மார்ச் 26ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 1 வகுப்புக்கான சில பாடத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இரண்டு முறை இந்த தேர்வுக்கான தேதி ஒத்திவைக்கப்பட்டு பிறகு ஜூன் 15ம் தேதி நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது ஆபத்தாக முடியும் இதை தவிர்க்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
ஆனால் கல்வித்துறை இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருந்தது. தேர்வுகளை நடத்துவதற்கான பணிகளை வேகமாக தொடங்கியது. 8ம் தேதியே பள்ளி மாணவர்களுக்கு ஹால்டிக்கெட், மற்றும் தலா 2 இலவச முகக் கவசங்கள் வினியோகம் செய்யப்பட்டன. மாணவர்களும் படித்ததையே மறுபடிமறுபடி படித்து தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். ஏற்கெனவே நடந்து முடிந்த பிளஸ் 1 தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்துவதற்காக விடைத்தாள்கள் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, திருத்தும் பணியும் தொடங்கியது. ஆனால் எதிர்க்கட்சிகள், மக்களின் நெருக்குதல் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு ஆகியவற்றால் தமிழக அரசு இப் பிரச்னையில் திணறி வந்தது. இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வும், பிளஸ் 1 தேர்வும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது.
ஆரம்பத்திலேயே இதை செய்திருக்கலாம். ஆனால், தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்த நிலையில் தேர்வுகள் ரத்து என்று அறிவித்ததால் அரசின் பணம் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12687 பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர் மொத்தம் 9 லட்சத்து 45 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இதுதவிர தனித் தேர்வர்கள் 10 ஆயிரத்து 742 பேரும் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் 15ம் தேதி முதல் 25ம் தேதிவரை நடக்க இருந்த தேர்வுகளுக்காக 12600 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
* கிருமி நாசினி தெளித்தல், கழிப்பறை சுத்தகரிப்பு என ஒரு தேர்வு மையத்துக்கு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 12,687 தேர்வு மையங்களுக்கும் இந்த செலவு செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு கோடியே ரூ.26 லட்சத்து 87 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
* தமிழகத்தில் 30 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சென்னையில் இருந்து கேள்வித்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்காக 30 ரூட் உருவாக்கப்பட்டது. அதில் பெரிய மாவட்டங்கள் 20 என்றும் சிறிய மாவட்டங்கள் 10, குறு மாவட்டங்கள் 5 என்றும் பிரித்து ரூட் ஒன்றுக்கு ரூ.2500 வீதம் கேள்வித்தாள் எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் நாள் ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம் என 5 நாட்களுக்கு ரூ.3லட்சத்து 75 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது.
* பத்தாம் வகுப்பு தேர்வுக்கு செய்முறைத் தேர்வுக்காக ஒரு பள்ளிக்கு ரூ.600 செலவிடப்பட்டுள்ளது. இதன்படி அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் சுமார் 6ஆயிரம் பள்ளிகளுக்கு ரூ.36 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
* பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு மொத்தம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 748 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கான விடைத்தாள்களை பொருத்தவரையில் முதன்மை விடைத்தாள், கூடுதல் விடைத்தாள், முகப்புச் சீட்டுகள் ஆகியவை அரசே வழங்குகிறது.
இவற்றை தைப்பதற்கான செலவு தாள் ஒன்றுக்கு ரூ.1 என்று கணக்கிட்டால் பாடம் ஒன்றுக்கு ரூ.9 லட்சத்து 55 ஆயிரத்து 748 என 5 பாடங்களுக்கு மொத்தம் ரூ.47 லட்சத்து78 ஆயிரத்து 740 செலவாகியுள்ளது.
* மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் தயாரிக்க ரூ. 10 லட்சம் செலவாகியுள்ளது. விடைத்தாள் மற்றும் ஹால்டிக்கெட்டுகளுக்கான பேப்பர் அரசு வினியோகம் செய்வதால் அது தனிக் கணக்கு.
* மேற்கண்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டபிறகு அவர்களுக்கான மதிப்பெண் சான்றுகள் தயாரிக்க வேண்டியுள்ளது. அதற்கான செலவைப்பார்த்தால் ஒரு சான்றுக்கு ரூ.8 என்று கணக்கிட்டால் மேற்கண்ட மாணவர்கள் எண்ணிக்கைப்படி கணக்கிட்டால், ரூ. 76 லட்சத்து 45 ஆயிரத்து 984 செலவாகிறது.
* பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களில் 4 லட்சத்து 96 ஆயிரம் மாணவ மாணவியர் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பதால் அவர்களுக்கு தேர்வு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 லட்சத்து 99 ஆயிரத்து 748 பேர் தேர்வுக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
* இது தவிர சமூக நலத்துறையின் மூலம் 46 லட்சத்து 50 ஆயிரம் முகக் கவசங்கள் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காக வாங்கப்பட்டு, 8ம் தேதி முதல் தலா 2 முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் செலவு சுமார் ரூ.4 கோடியே 50 லட்சம்.
* தெர்மல் ஸ்கேனர் கருவி ரூ.4 ஆயிரம் என்று கணக்கிட்டால் 12600 தேர்வு மையங்களுக்கு 3 கருவிகள் வீதம் சுமார் ரூ.15 கோடியே 12 லட்சம் செலவாகியுள்ளது.
* தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர வசதியாக 87 தடங்களில் 160 பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 8ம் தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கான செலவுகள் தனி.
இந்நிலையில், தேர்வு மையங்களில் தேர்வுக் கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர், கேள்வித்தாள் கட்டுக்காப்பு மைய பொறுப்பாளர்கள், மற்றும் ஆசிரியர்கள் உதவியாளர்கள் என்று 50 ஆயிரம் பேர் இந்த தேர்வுப் பணியில் ஈடுபட இருந்தனர். இவர்களுக்கான தேர்வுக் கால பணி ஊதியம், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான செலவினங்களுக்கு அவசியம் இல்லாமல்போய்விட்டது. இவை தவிர ஆசிரியர்கள் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தனிச் செலவினங்கள் உள்பட பல கோடி ரூபாய் செலவிட்ட நிலையில் தேர்வுகள் ரத்து செய்து அரசு உத்தரவிட்டதால், பலகோடி அரசின் பணம் வீணாகியுள்ளது.
கிராமத்தில் பெருமைக்கு மாவு இடிப்பது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஒரு வீட்டில் மாவு இடித்து சாப்பிட்டால், அதைப் பார்த்த பக்கத்து வீட்டு பெண் தானும் மாவு இடிப்பதுபோல காட்டிக் கொள்ள வீம்புக்கு என்று வெறும் உரலை இடிப்பாராம். அதுபோலத்தான் பள்ளி கல்வித்துறையும் செயல்பட்டுள்ளது. தேர்வு நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல், வீம்புக்கு நடத்துவதாக அறிவித்ததால், மாணவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதோடு, கொரோனா காலத்தில் அரசுக்கு தேவையில்லாமல் பல கோடி ரூபாய் செலவும் ஏற்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Friday, June 12, 2020
10ம் வகுப்பு தேர்வு ரத்தானதால் பல கோடி ரூபாய் வீண் !!
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment