Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதம், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணை வைத்து மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கினால் அது மாணவர்களின் எதிர்காலத்தை அதிகளவில் பாதிக்கும் என ஆசிரியர்கள், பெற்றோர் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் மூலம் பாதிப்பு ஏற்படாத வகையில் மதிப்பெண் பட்டியலில் '2020 கொரோனா ஆண்டு' என்று குறிப்பிட வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
தனியார் பள்ளி ஆசிரியை (கோவை): 'தேர்வு ரத்து செய்தி ஆசிரியராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வைத்து தயார் செய்து இருந்தோம். அவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களைவிட கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்பு இருந்தது. தற்போது அறிவித்துள்ள மதிப்பெண் நடைமுறையால் 90 சதவீத மாணவர்கள் குறைந்த மதிப்பெண்தான் எடுப்பார்கள். பாடங்களில் 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு மதிப்பெண் பட்டியலை வரையறை செய்ய வேண்டும். மேலும், பிளஸ் 1 வகுப்பிற்கு நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்களை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்' என்றார்.
அரசு பள்ளி ஆசிரியர் (கோவை): 'மதிப்பெண் பட்டியல் வழங்குவதில் அரசின் வழிகாட்டுதல் குழப்பமாக உள்ளது.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்துவிட்டனர். பல மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 10 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்றுள்ளனர். இவர்களை எப்படி தேர்ச்சி பெற்றவர்கள் என்ற கணக்கில் காட்டுவது? என தெரியவில்லை.
இந்த மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கையின்போதும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. சில மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களை எடுக்க முடியாமல் போகும்.
தவிர, இவர்கள் மத்திய, மாநில அரசுகளின் தேர்வுகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பின் எழுதும் போது இந்த மதிப்பெண் பட்டியல் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் மதிப்பெண் பட்டியலில் கொரோனா ஆண்டை குறிப்பிட வேண்டும். மதிப்பெண் பட்டியல் நடைமுறையில் தெளிவான விளக்கங்கள் அளிக்க வேண்டும்'.
கோவையை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியரான 10 ம் வகுப்பு மாணவியின் தாய் கூறும்போது, காலாண்டு, அரையாண்டு தேர்வில் பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி குறைவான மதிப்பெண்கள்தான் வழங்கப்படும்.
அதைவைத்து பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிட்டால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
பள்ளியில் எடுக்கும் மதிப்பெண்களுக்கும், பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் வரும். பள்ளியில் எடுப்பதைவிட கூடுதலாக 100 மதிப்பெண்களுக்கு ேமல் பொதுத்ேதர்வில் மாணவர்கள் எடுப்பர். ஆனால் இப்போது கூறப்பட்டுள்ள வரைமுறைப்படி பார்த்தால் மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்தான் கிடைக்கும். எனவே இந்த முறையை கடைபிடித்தால் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் விரும்பும் குருப்பை கொடுக்க ேவண்டும். அல்லது பிளஸ் 1 வகுப்பில் குரூப் தேர்வு செய்ய நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்.
மேலும் இந்த மதிப்பெண்களை மாணவர்களின் எதிர்கால படிப்புக்கோ, வேலைக்கோ சான்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.
முருகேசன் (சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருப்பூர்): காலாண்டு, அரையாண்டு தேர்வில் 80 சதவீத மதிப்பெண்ணையும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணையும் கணக்கிட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சில முரண்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறோம்.
ஏனெனில் புதிய பாடத்திட்டத்தில் மாணவர்கள் ஆரம்பம் முதலே மெதுவாக கற்கும் சூழல் இருந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கடினமாக இருந்த காரணத்தினாலும், புதிய பாடத்திட்டம் என்பதாலும் போதிய மதிப்பெண் பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். எனவே தமிழக முதல்வர் தலையிட்டு, மாணவர்களின் திருப்புதல் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கினால், அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த புதிய பாடத்திட்டத்தில் அரை ஆண்டிற்கு பிறகே மாணவர்களுக்கு தேர்வு பற்றிய ஒரு முழு வடிவம் கிடைக்கும்.
ஆகவே அரை ஆண்டுக்கு பின் நடைபெற்ற தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்ணை வழங்கினால் மாணவர்கள் பயனடைவர்.
சுப்பிரமணி (சமூக அறிவியல் ஆசிரியர், நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளி): காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதம் மதிப்பெண்ணும்,
வருகைப்பதிவேட்டை வைத்து 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற முறையில் மதிப்பெண் அளிக்கும்போது, தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அஜாக்கிரதையாக இருந்த நல்ல முறையில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், துவக்கத்தில் இருந்து சிறந்த முறையில் படித்து வந்த மாணவர்களுக்கு இத்திட்டம் சிறந்த முறையில் அமையும்.
சதீஷ் (ஆசிரியர், ஊட்டி): காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை அளித்தால், மாணவர்கள் படிக்காமல் விட்டு விடுவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் சில பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டது. அதேசமயம், திருப்புதல் தேர்வில் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், திருப்புதல் தேர்வையும் பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுந்தரமூர்த்தி (நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர், திருப்பூர்): காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களைக் கூட்டி அதிலிருந்து 80 சதவீதமும், வருகைப்பதிவைக் கணக்கிட்டு 20 சதவீதமும் ஆக 100 சதவீதம் கணக்கில் (ஆல் பாஸ்) அனைவரும் தேர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்குப் பிறகு வைக்கும் திருப்புதல் தேர்வுகளில்தான் முழுமையான தகுதியைப் பெறுகிறார்கள். எனவே தமிழக முதல்வர் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்குப் பிறகு வைக்கும் திருப்புதல் தேர்வுகளிலிருந்து 80 சதவீதம் மதிப்பெண்களைக் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கிட உத்தரவிட வேண்டுகிறோம்.
அச்சம் கொள்ள தேவையில்லை
நேரு (தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர்,ஈரோடு): காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் மற்றும் வருகைப்பதிவேடு ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் முறையில் சிக்கல் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு சில மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் குறைவாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வு மதிப்பெண்களும் குறையும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளை பொருத்தவரை பெரும்பாலும் மதிப்பெண்கள் குறைப்பதில்லை. மாறாக, கண்டிப்புடன் பேப்பர் திருத்தப்பட்டிருக்கலாம். பொதுத்தேர்வு எழுதி இருந்தாலும் பேப்பர் திருத்துவதில் அதே கண்டிப்பு இருந்திருக்கும்.
மேலும், பிளஸ் 1 குரூப் தேர்வு செய்யப்படுவதற்கும், பாலிடெக்னிக், ஐடிஐ படிக்க செல்வதற்கும்தான் 10ம் வகுப்பு மதிப்பெண் பயன்படுகிறது. அரசு பள்ளிகளை பொருத்தவரை மாணவர்கள் விரும்பும் குரூப் வழங்கப்படுகிறது. எனவே, பிரச்சனை இல்லை. பாலிடெக்னிக், ஐடிஐக்களில் பெரியதாக அட்மிஷனுக்கு போட்டி இல்லாத நிலைதான் உள்ளது. ஒரு வேளை சிக்கல் வந்தாலும் எளிதில் தீர்வு காணவும் நிறைய வழிவகைகள் உள்ளன. எனவே மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால், அதேவேளையில் தனியார் பள்ளிகளின் சூழ்நிலைகளை அரசு கண்காணிப்பது அவசியமாகும்.
IMPORTANT LINKS
Thursday, June 11, 2020
Home
கல்விச்செய்திகள்
ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவகாரம் ஆசிரியர்களின் கருத்துகள்
ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவகாரம் ஆசிரியர்களின் கருத்துகள்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment