Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 13, 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலத்தில் தமிழக முதல்வரின் முகாம் அலுவலகத்தில் தமிழ் சமூகக் கல்வி இயக்கம் சார்பில் அதன் தலைவர் முத்துசாமி, செயலாளர் தம்பயா, பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (ஜூன் 13) மனு கொடுத்தனர்.

மனு குறித்து செயலாளர் தம்பயா கூறியதாவது:

"1996-ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு, கிராமப்புற மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தது. அடுத்து, 2001-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை 25 சதவீதமாக உயர்த்தினார்.

இந்த நிலையில், கிராமப்புறங்களில் தனியார் பள்ளிகள் அதிகமாகி, அவற்றில் சேர்ந்து பயின்ற நகர்ப்புற மாணவர்கள் அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பெற்றனர்.

இதையடுத்து, நகர்ப்புற தனியார் பள்ளிகள் வழக்குத் தொடுத்ததால், கிராமப்புற மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் கடந்த 20 ஆண்டுகளாக, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கனவாகவே உள்ளது. நீட் தேர்வுக்குப் பின்னர், 2017-18, 2018-19, 2019-20 ஆகிய கல்வி ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளில் இருந்து, மருத்துவக் கல்விக்கு 10 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சென்றனர்.

இந்தச் சூழலில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, எவ்வித கோரிக்கையும் எழாத நிலையிலும், தமிழக அரசு தாமாகவே முன்வந்து, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு குழு அமைத்தது பாராட்டுக்குரியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று குழு பரிந்துரை செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனிவான நடவடிக்கையைப் போன்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டினை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு கருணை கூர்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப, இட ஒதுக்கீட்டினை தனித்தனியாக வழங்கிடும் வகையில், சட்டத்தை வடிவமைக்க வேண்டும்". இவ்வாறு தம்பயா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News