Wednesday, June 10, 2020

நிறைவடைந்தது பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி!


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.

202 மையங்களில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 2 முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் பேர் எழுதினர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த மே 27-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 202 மையங்களில் தொடங்கியது.

43,000 ஆசிரியர்கள், 48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மே 27-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாகவும், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் அடுத்த 10 நாட்களில் நிறைவடையும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு இறுதித் தேர்வை 36,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாத நிலையில், அவர்களுக்கு மறு வாய்ப்பு தேர்வு வரும் ஜூன் 18-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அந்தத் தேர்வை ஒத்திவைப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இறுதித் தேர்வை எழுதாத மாணவர்கள் இறுதித் தேர்வை மட்டும் எழுதவில்லையா? அல்லது அதற்கு முந்தைய தேர்வுகளையும் எழுதவில்லையா என்பதை ஆராய்ந்து, பெரும்பாலான மாணவர்கள் முந்தைய தேர்வுகளையும் எழுதாமல் இருந்தால், திட்டமிட்டபடி 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அப்படி இல்லாத பட்சத்தில் மறு வாய்ப்பு தேர்வை நடத்திய பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News