Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 14, 2020

பள்ளி தேர்வை 2 பருவமாக குறைக்க குழு அறிக்கையில் பரிந்துரை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சென்னை: கொரோனா பிரச்னை நீடிப்பதால், புதிய கல்வியாண்டில், பள்ளி பாடங்கள் மற்றும் தேர்வுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படவில்லை; திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பிரச்னையை சமாளித்து, புதிய கல்வியாண்டில், கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்ய, அரசின் சார்பில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.பள்ளிக்கல்வி கமிஷனர், சிஜி தாமஸ் தலைமையிலான குழுவினர், ஆசிரியர் சங்கங்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறை நிர்வாகிகளிடம் கருத்துகளை பெற்றனர். இதையடுத்து, முதல் கட்ட அறிக்கையை, தமிழக அரசிடம், குழுவின் தலைவர் சிஜி தாமஸ் சமர்ப்பித்துள்ளார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும், கூடுதல் வகுப்பறைகள், கட்டடங்கள் ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு இடையே, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.அதற்கேற்ப, சில வகுப்புகளுக்கு முற்பகலிலும், சில வகுப்புகளுக்கு பிற்பகலிலும் பாடங்களை நடத்தலாம். அதன் வழியாக, 50 சதவீத மாணவர்கள் மட்டும், பள்ளிகளில் இருக்கும் வகையில், சமூக இடைவெளியை பின்பற்ற முடியும்.மாணவர்களுக்கு, சீருடையுடன் முக கவசம் கட்டாயம். அதேபோல, அனைத்து மாணவர்களும், பள்ளி இடைவேளை, மதிய உணவு நேரங்களில், கைகளை சோப்பால் சுத்தம் செய்வது அவசியம். அதற்கு ஏற்ற தண்ணீர் மற்றும் குழாய் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளிகளை மூன்று மாதம் தாமதமாக திறக்கும் போது, அதற்கேற்ப பாடச்சுமை குறைக்கப்பட வேண்டும். அடிப்படை கல்வி மாறாத வகையில், இந்த பாட குறைப்பு இருக்க வேண்டும். மூன்று பருவ பாடங்கள் மற்றும் தேர்வுகளை, இரண்டு பருவங்களாக மாற்றலாம். அதற்கு ஏற்ப பாடங்களையும், வகுப்பு நாட்களையும், வகுப்பு நேரத்தையும் நிர்ணயிக்க வேண்டும்.'ஆன்லைன்' வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வழி, 'அசைன்மென்ட்'களை மாணவர்களுக்கு வழங்கலாம். கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடங்களை நடத்தலாம். ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி, அவற்றை, 'சிடி'யாக வழங்கி, வீட்டில், 'டிவி'யில் போட்டு பார்த்து, படிக்க வைக்கலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட அறிக்கையில், சில பரிந்துரைகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவை விரிவான அறிக்கையில் சமர்ப்பிக்கப்படலாம் என்றும், பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News