உலக நாடுகளையெல்லாம் நடுங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பரவத்தொடங்கியது எப்போது? - இந்தக் கேள்வி மில்லியன் டாலர் கேள்வியாக இப்போது எதிரொலிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளி வந்தன. கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. இதில் உண்மைத்தகவல்களை வெளியிடாமல் சீனா மறைத்து விட்டது என்பதுதான் இன்னும் அமெரிக்காவின் குற்றச்சாட்டாக அமைந்துள்ளது. சீனா சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில்கூட இதுபற்றிய உறுதியான தகவல்கள் இல்லை.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று, உகானில் தோன்றியது டிசம்பர் மாதம் அல்ல. அதற்கு முன்பாகவே, ஆகஸ்டு மாத தொடக்கத்திலேயே பரவத்தொடங்கி விட்டது என்று உலகப்புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரி ஆய்வு அம்பலப்படுத்தி இருக்கிறது. அதுவும் சும்மா இல்லை. செயற்கைக்கோள் படங்களை ஆதாரமாகக்கொண்டும், இணையதள தேடல்களை அடிப்படையாகக்கொண்டும்தான் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி தனது ஆய்வின்மூலம் இதை வெளியுலகுக்கு கொண்டு வந்துள்ளது.
செயற்கை படங்களின் அடிப்படையில் உனானில் உள்ள முக்கிய ஆஸ்பத்திரிகளில் கார்களின் இயக்கத்தை ஹார்வர்டு மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து இருக்கிறார்கள். உகான் ஆஸ்பத்திரிகளில் செப்டம்பர் மத்தியில் தொடங்கி அக்டோபர் மத்தி வரையில், வியக்கத்தக்க அளவுக்கு கார்கள் அங்கு குவிந்திருந்ததை செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றனவாம்.
இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜான் புரவுன்ஸ்டீன் இது பற்றி கூறுகையில், " கோடை காலத்தின் பிற்பகுதியிலும், இலையுதிர் காலத்தின் தொடக்கத்திலும் தொடங்கி உகானில் உள்ள 5 பெரிய ஆஸ்பத்திரிகளில் வந்த கார்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்து இருந்ததை நாங்கள் கண்டோம்" என்கிறார். இப்படி ஆஸ்பத்திரிகளில் கார்கள் குவிவது, ஒரு வித தொற்றுநோய் அதிகளவில் பரவுகிறபோதுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட சொல்கிறார்கள்.
2019-ம் ஆண்டு கோடை காலத்தின் பிற்பகுதியில் இருந்து டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் உகானில் உள்ள 5 பெரிய ஆஸ்பத்திரிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வந்துள்ளளனர். அப்போது எல்லா ஆஸ்பத்திரிகளிலுமே ஆகஸ்டு தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் கார்கள் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் ஏறக்குறைய 350 செயற்கை கோள் படங்களில் பயன்படுத்தத்தக்க 108 படங்களை ஆராய்ச்சியாளர்கள் உகான் ஆஸ்பத்திரிகளையும், அதன் சுற்றுப்புற சாலைகளையும் ஆராய பயன்படுத்தி உள்ளனர். அதில் 2019 செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில்தான் கார்கள் நோயாளிகளுடன் மிக அதிக எண்ணிக்கையில் வந்து சென்றுள்ளன.
உகானின் தியான்யு ஆஸ்பத்திரியில் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 171 கார்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் மறு ஆண்டில் இந்த எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 67 சதவீத அளவுக்கு கார்கள் அதிகமாக வந்துள்ளன. உகானில் உள்ள மற்ற ஆஸ்பத்திரிகளில் இது 90 சதவீத அளவுக்கு அதிகமாக இருந்து உள்ளது.
இன்னொரு முக்கிய அம்சம், 2019 செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இடையே உகான் ஆஸ்பத்திரிகளில் கார்களின் எண்ணிக்கை அதிகரித்த சமயத்தில், சீனாவின் தேடல் இணையதளமான 'பைடு' இணைய தளத்தில் அதிகமாக இருமல், வயிற்றுப்போக்கு போன்ற வார்த்தைகளை குறிப்பிட்டு தேடி உள்ளனர். இதெல்லாம் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், தேடல் இணையதளத்தில் மேலே குறிப்பிட்ட உடல்நல பிரச்சினைகளின் தேடலும் ஒரே சமயத்தில் இருந்து இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். எனவே கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் தொடங்கியது கடந்த டிசம்பரில் அல்ல, அதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது என்பதுதான் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது!
No comments:
Post a Comment