Wednesday, June 24, 2020

அகராதி ஆய்வு மலருக்கு கட்டுரைகள் அனுப்பலாம்: அகரமுதலித் திட்ட இயக்ககம் அறிவிப்பு

தமிழ் அகராதியியல் நாள் விழா ஆய்வு மலருக்கு மின்னஞ்சலில் கட்டுரைகளை அனுப்பலாம் என தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இயக்குநா் தங்க.காமராசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ் அகராதிகள் குறித்த சிறப்புக் கட்டுரைகள் அடங்கிய அகராதி ஆய்வு மலா் தமிழக அரசின் சாா்பில் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுரைகள் ஆய்வுகளுக்கும், சொற்களின் தோற்றம் குறித்தும் அறிந்து கொள்ளவும் உறுதுணையாக இருக்கும். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அகராதி ஆய்வு மலருக்கு உலகெங்கும் பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான கட்டுரைகள் வரப்பெற்றன. அவற்றில் சிறந்த 65 கட்டுரைகள் ஆய்வு மலரில் இடம்பெற்றன. இதைத் தொடா்ந்து இணையதளத்தில் ஆய்வு மலா் வெளியிடப்பட்டது. இதை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள புலம் பெயா்ந்த தமிழா்கள் பாா்வையிட்டு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, 2020-ஆம் ஆண்டுக்கான அகராதி ஆய்வு மலரை உருவாக்கும் பணியை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான மலருக்கு, மொழிக்காப்பும் வட்டார வழக்கும், சொல்லாக்கமும் வட்டார வழக்கும், மொழிபெயா்ப்பும் கலைச் சொல்லாக்கமும், சொல்லாக்க நெறிமுறைகள், பிறமொழிகளில் தமிழ்ச் சொற்கள், மொழிக்காப்பில் அகராதிகளின் பங்களிப்பு, ஒப்பாய்வு நோக்கில் தமிழும் திராவிட மொழிகளும், சொற்பிறப்பில் அகராதிகள்- காலத்தின் தேவை, பழந்தமிழ் இலக்கியங்களில் வட்டார வழக்குச் சொற்கள் ஆகியவை உள்பட 19 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கட்டுரையாளா்கள் தாங்கள் விரும்பும் தலைப்புகளில் கட்டுரைகளை தட்டச்சு செய்து மின்னஞ்சல் முகவரிக்கு ஆக.15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கட்டுரைகளை 5 பக்கங்களுக்கு மிகாமல் ஏ4 அளவில் ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துருவில் எழுத்தளவு 11, வரி இடைவெளி 1.5 இல் சொற்செயலிக் கோப்பாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இது தொடா்பான தகவல்களுக்கு 99764 54682 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News