கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய முன்னேற்றமாக டெக்ஸாமெதசோன் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை இருக்கும் என பிரிட்டன் வல்லுநர்கள் கருதுவதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20-இல் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமலேயே தொற்றிலிருந்து குணமடைகின்றனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரிலும் பெரும்பாலானோர் குணமடைகின்றனர்.
ஆனால் சிலருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. அதிக ஆபத்தில் இருக்கும் இந்த நோயாளிகளுக்கு டெக்ஸாமெதசோன் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையில் , இதுகுறித்த ஆராய்ச்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனைகளில் உள்ள 2,000 நோயாளிகளுக்கு டெக்ஸாமெதசோன் கொடுக்கப்பட்டது. இவர்கள் டெக்ஸாமெதசோன் கொடுக்கப்படாத 4,000 நோயாளிகளுடன் ஒப்பிடப்பட்டனர். வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகள் இறப்பதற்கான வாய்ப்பை இது 40 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாகக் குறைக்கிறது.
ஆக்ஸிஜன் தேவை உள்ள நோயாளிகள் இறப்பதற்கான வாய்ப்பை 25 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகக் குறைக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பீட்டர் ஹார்பி தெரிவிக்கையில் ; இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு இதுமட்டும்தான் மருந்தாக இருக்கிறது.
அது குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது. இது மிகவும் முக்கியமான முன்னேற்றமாகும் என்றார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தொடக்கத்திலிருந்தே, பிரிட்டனில் சிகிச்சையளிக்க இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5,000 உயிர்கள் வரை காப்பாற்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment