சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது முடக்கத்தால் இணைய வழிக் கல்வியை ஊக்குவிக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியது. இணையவழி கற்பித்தல் முறை என்பது சமூகத்தில் ஏழை எளிய, வசதியற்ற குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனி என்பது தெரிகிறது. மேலும் இணைய வழி வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள், மாணவர்கள் காதொலிக் கருவிகளைப் பயன்படுத்துவதும், கண்கள், காதுகளின் திறனைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே சமச்சீரற்ற முறையில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் இணையவழி கற்பித்தல் முறையைக் கைவிட்டு, தொலைக் காட்சிகளின் வழியாக, தொலைக்கல்வி வகுப்புகள் நடத்தும் முறையை மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.தற்போது நெருக்கடியான காலகட்டத்தில் நாடு உள்ளபோது, செயற்கைகோள் மூலம் இயங்கும் கல்விக்கான சேனல்களை இதற்குப் பயன்படுத்தும் வகையில் திறனை அதிகரிப்பதுடன், தனியார் தொலைக்காட்சிகளிலும் கற்பித்தலுக்கான நேரத்தை ஒதுக்கித் தர மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்த வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment