Tuesday, June 16, 2020

நீட்- அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு எடுத்த முடிவு


நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார். மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, அரசுக்குப் பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கடந்த 9ஆம் தேதி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (ஜூன் 15) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. துணைமுதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில், கொரோனா பரவல் நிலை, தமிழகத்தில் தற்போதைய முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்த நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நீட் தேர்வு வந்த பிறகு அதிகபட்சம் ஆறு மாணவர்கள்தான் அரசுப் பள்ளிகளிலிருந்து மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல முடிந்தது. தற்போது, இந்த முடிவின் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் மருத்துவபடிப்பு பயிலலாம் என்ற நிலை உருவாகியுள்ளது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News