சில ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் மத்தியில் பேசும்பொருளாக மாறி இருக்கிறது. அதுவும் குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் அதிகமாக பேசப்படுகிறது. இந்த நிலைமைக்கு யார் காரணம்?
எழுபது எண்பதுகள் வரை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேட்டியும் தையல் சாயம்போன சட்டையும் அணிந்து மளிகை கடையில் கணக்கு வைத்து அதை அடைக்க முடியாமல் பள்ளிக்கு செல்ல வேறு வழியில் ஒளிந்து சென்ற காலங்களை மறக்க முடியுமா?
வீட்டு உரிமையாளருக்கு வாடகை கொடுக்க முடியாமல் தீபாவளிக்கு கோ-ஆப்டெக்ஸ் மற்றும் துணிகளை நம்பி வாழ்ந்த காலங்களை மறக்க முடியுமா! அப்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் வாங்கிய ஊதியம் பற்றி இந்த சமூகம் கண்டு கொண்டதில்லை.
எண்ணற்ற சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்தி ஓரளவுக்கு ஊதியம் பெறுவதற்கு ஆசிரியை இயக்கங்கள் செய்த தியாகங்கள் எத்தனை? நாம் போராடியதால் நம்முடன் சேர்ந்து அரசு ஊழியர்களும் காவல்துறையும் ஊதிய உயர்வு பெற்றது தான் வரலாறு.
சற்று சிந்தித்துப் பார்ப்போம். நாம் அரசுப் பள்ளி ஆசிரியராக இல்லாமல் நடுநிலையோடு அகத்தாய்வு செய்து பார்ப்போம்.
ஒரு அரசியல்வாதி பெரிய வீடு கட்டினாலும் காரில் பவனி வந்தாலும் பளபளவென்று நகை போட்டிருந்தாலும் அவர் அதிகம் சம்பாதிக்கிறார் என்று கூறுவதற்கு பொது சமூகத்திற்கு துணிச்சல் கிடையாது.
அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும் மற்ற அரசுத்துறை ஊழியர்கள் வீடு கட்டினாலும் வசதியாக இருந்தாலும் யாரும் அவர்களை பார்த்து எரிச்சலுடன் பேசுவது கிடையாது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் குறிவைத்து தாக்கப்படுவது ஏன் என்று சிந்திப்போம்? தவறு யார் மீது?
தவளை தன்வாயால் கெடுகிறது இது தெரிந்த பழமொழி
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது வெற்று ஆடம்பரத்தால் கெடுகிறார்கள். இதுதான் புதுமொழி.
அனைவரும் சொல்வது போல் ஆசிரியர்களுக்கு அளவுக்கு மீறிய கொடுக்கப்படுகிறதா? இதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் வெளிப்படையாக அவர்கள் ஊதியம் பெறும் வங்கிக்கணக்கில் சிபில் ஸ்கோரை பார்த்தால் போதும். வீட்டுக்கடன் பிடித்தம் வங்கி கடன் பிடித்தம் தனிநபர் கடன் பிடித்தமென்று சிபில் ஸ்கோர் மிகக் கேவலமான நிலையில் உள்ளது. ஆனாலும் வெளியில் பெத்த பேராக உள்ளது. ஏன்?
கூட்டுறவு கடன் சங்கங்கள், நல நிதி சந்தா கடன் இவ்வளவு கடன்களையும் மீறி கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. உண்மை நிலை இப்படியிருக்க ஆசியர்களுக்கு அரசாங்கம் அள்ளிக் கொடுக்கிறது என்று சமூகம் சொல்கிறது.
மற்ற அரசு பணியில் உள்ள மகளிர் தங்களிடம் நல்ல ஆடைகள் இருந்தாலும் பணிக்கு செல்லும்போது தங்களிடம் இருப்பதிலேயே சுமாரான ஆடையை அணிந்து செல்கின்றனர். திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு செல்லும் பொழுதே தங்க நகைகளை அதிகம் அணிகின்றனர். ஆனால் நம் ஆசிரியைகள் தினமும் பள்ளிக்கு வரும் காட்சியே திருவிழா கோலம் தான். சில விதிவிலக்குகள் தவிர மற்றவர்கள் இதை மறுக்க முடியுமா?
ஆண் ஆசிரியர்கள் கடனுக்காகவாவது கார் வாங்கி மறக்காமல் அதை முகநூலில் பதிவிட்டு தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று பறைசாற்றிக் கொள்கின்றனர்.
தொழில் அதிபர்கள் மருத்துவர்கள் வியாபாரிகள் வழக்கறிஞர்கள் இவர்கள்தான் தமிழகத்திலுள்ள சேவை சங்கங்களில் ஒரு காலத்தில் பொறுப்பில் இருந்தார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் தற்போது உள்ள சேவை சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான். இவர்கள் ஊரில் உள்ள வியாபார பெரும் புள்ளிகளுடன் போட்டி போட்டு இந்த பொறுப்புக்கு வருகின்றனர். சேவை நோக்கத்துடன் ஆசிரியர்கள் இந்த பொறுப்புக்கு வந்தாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கோட்டு சூட்டு போட்டு செயல்படுவது வெகு ஜனத்தின் கண்களை உறுத்துகிறது.
பொதுக் காரியங்களுக்கு பேரிடர்களுக்கு நன்கொடை வசூலிப்பவர்கள் முன்பெல்லாம் கடைத் தெருவுக்கும் அரசியல்வாதியை வீடுகளுக்கும் செல்வார்கள். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தற்போது பெரும் நன்கொடையாளர்கள் ஆக உருவெடுத்திருப்பது அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
ஊரடங்கு அரசால் விதிக்கப்பட்டது. மாணவர்கள் உயிர் பாதுகாப்பு க்கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் தனியார் பள்ளிகள் சங்கம் ஏதோ ஆசிரியர்கள் இஷ்டப்பட்டு வீட்டில் இருப்பது போலவும் அவர்களுக்கு ஊதியம் "சும்மா"அளிக்கப்படுகிறது என்றும் அறிக்கை விடுவது வருத்தத்தை அளிக்கிறது.
அரசு பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை கேரளா மாநிலம் போல பிடித்தம் செய்ய வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை? இசைக்கலைஞர்கள் சமையல் கலைஞர்கள் கேட்பது போல் எங்களுக்கு வருமானம் இல்லை அதனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கேட்பது நியாயம்? அரசு பள்ளி ஆசிரியர்களுடன் ஒப்பிடுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் அரசுக்கு போட்டியாக சில அரசு பள்ளி ஆசிரியர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்குவது குடை வழங்குவது சீருடை வழங்குவது ஊக்கத்தொகை வழங்குவது வெகுஜன மக்களுக்கு குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.
நன்கொடை அளிப்பது நல்ல பண்பு தான். ஆனாலும் அதை நான்கு பேர்களுக்கு தெரிவது போல் செய்தால் அதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை பொறாமைப்பட்டு ஆசிரியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்கள் அதனால்தான் செலவழிக்கிறார்கள் என்ற பெயரை பெற்று தந்திருக்கிறது.
இனிவரும் காலங்களிலாவது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் தங்களது நடவடிக்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ளாவிட்டால் எதிர்காலம் மிகச் சிரமமாக இருக்கும். புதிய கோரிக்கைகளை வெல்வது என்பது ஒருபுறம் இருக்கட்டும், இழந்த பணப் பயன்களை பெறுவது மறு புறம் இருக்கட்டும் , முதலுக்கே மோசம் போல் ஆசிரியர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டும் என்று மற்றவர்கள் போராடும் நிலைமையை உருவாக்க நாமே காரணமாக இருக்க வேண்டாம்.
என்னுடைய பதிவு யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். ஆசிரியரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதற்காகத்தான் இந்தப் பதிவு. தவறுகள் இருந்தால் வெளிப்படையாக சுட்டிக்காட்டவும். நன்றி.
நாகை பாலா
27.6.20
No comments:
Post a Comment