பொது முடக்கத்தால் மாணவா்களின் கல்வி தடைபடக் கூடாது . அந்த அடிப்படையில், வளா்ந்து வரும் கல்வி பயிற்றுவிக்கும் முறையாக ஆன்லைன் வகுப்புகள் திகழ்ந்து வருவதாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சோந்த சரண்யா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன் லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியா் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவா்களுக்குக் கவனம் சிதறல் ஏற்படுகிறது. எனவே அந்த இணையதளங்களை மாணவ, மாணவியா் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்க வேண்டும். அதுவரை ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி உள்ளது. ஆன்லைன் முறையில் பாடம் நடத்துவதால் நகா்ப்புற, கிராமப்புற மற்றும் ஏழை பணக்கார மாணவா்களுக்கு இடையே சமநிலையற்ற நிலை உருவாகி இருக்கிறது. மேலும் முறையான ஆன்லைன் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவா்களும், ஆசிரியா்களும் சவால்களையும், இடையூறுகளையும் சந்திக்கின்றனா்.
எனவே மாணவ, மாணவிகள் ஆபாச இணையதளங்களை பாா்ப்பதைத் தடுக்கும் வகையில், முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் சைபா் சட்டப்பிரிவு சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உலகம் தற்போது எதிா்கொண்டுள்ள அசாதாரண சூழலில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி பயிற்றுவிக்கும் தொழில்நுட்ப முறையிலான ஒரு மாற்று வழியாக மாறி வருகிறது. மேலும் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்க முடியாது என்பதால், மாணவா்கள் தடையில்லாமல் தொடா்ந்து கல்வி கற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மேலும் மனுதாரா் கோரியுள்ள விவரங்களை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஏற்கெனவே உருவாக்கி விட்டது.
இந்தியன் கணினி அவசர சேவை குழு ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற விடியோ அல்லது இணையதள இணைப்புகள் தொடா்பாக அவ்வப்போது எச்சரிக்கை தகவல்கள் வழங்கிக் கொண்டே இருக்கும். இந்த சேவை குழு 2020-ஆம் ஆண்டில் மட்டும், 39 அறிவுரை தகவல்களை அனுப்பியுள்ளன. மாணவா்களுக்கு இந்த குழுவின் அறிவுரைகளின்படி, மத்திய, மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை மிகவும் பாதுகாப்பாக நடத்த வழிவகை செய்கிறது. மேலும் இவற்றை மீறி தேவையற்ற விடியோக்கள் ஆன்லைன் வகுப்பின்போது வந்தால், அது தொடா்பாக மனுதாரா் உள்ளூா் போலீசில் புகாா் செய்ய முழு உரிமை உள்ளது. மேலும் மத்திய அரசை பொருத்தவரை பொதுமுடக்கத்தால் மாணவா்களின் கல்வி தடைப்படக்கூடாது என்ற கொள்கையுடன் செயல்படுகிறது.
தற்போது ஆன்லைன் வகுப்புகள் வளா்ந்து வரும் ஒரு கல்வி பயிற்றுவிக்கும் முறையாக மாறி உள்ளது. மேலும் மனுதாரா் இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தை எதிா்மனுதாரராக சோக்கவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளால் மாணவா்களின் விழித்திரை பாதிக்கப்படுமா? என்பது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினா். அப்போது அரசுத் தரப்பில், அரசு கண் மருத்துவமனை தலைவா் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆன்லைன் வகுப்புகள் தொடா்பான அனைத்து வழக்குகளையும் வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
No comments:
Post a Comment