Sunday, June 14, 2020

தொற்று தடுப்பு பணிகளில் பிற துறைகளுக்கு முக்கிய பொறுப்பு


சென்னை : சென்னையில், தொற்று தடுப்பு பணியை தீவிரப்படுத்த, 'மைக்ரோ பிளான்' மூலம், முக்கிய பொறுப்புகள், இதர துறைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையை, மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில், சுகாதாரத் துறை தான், முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற நிலை இருந்தது. இதர துறைகள், களத்தில் இருந்தாலும், மொத்த சுமையும் சுகாதாரத் துறை மீது விழுந்தது. அவர்களில் சிலர், தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், பணிச்சுமை அதிகரித்தது. இதனால், தடுப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது.இந்நிலையில், பணிகளை பகிர்ந்து அளித்து, அதை கண்காணித்து ஆலோசனை வழங்க, மண்டல அளவில், 'மைக்ரோ பிளான்' 'செயல்படுத்தப்பட்டு உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை மற்றும் மறு பரிசோதனைக்கு அனுப்புவது, தொடர்புகளை கண்டறிவது, பரிசோதனை செய்வது போன்ற பணிகளை, சுகாதாரத்துறை செய்ய வேண்டும்.இதை, மண்டல நல அதிகாரி, வட்டார கூடுதல் மாநகர நல அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை துணை ஆணையர் ஆகியோர் கண்காணிப்பர்.கிருமி நாசினி தெளிப்பு, கட்டுப்பாட்டு பகுதி நிர்வகிப்பது, அங்குள்ள வீடுகளை கண்காணிப்பது, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது போன்ற பணிகளை, பொறியியல் துறையினர் செய்ய வேண்டும்.இதை, செயற்பொறியாளர், மண்டல அதிகாரி, தலைமை பொறியாளர், துணை ஆணையர் ஆகியோர் கண்காணிப்பர்.காய்ச்சல் பரிசோதனை, மருத்துவ முகாம், வயதானவர்கள் மீது, சிறப்பு கவனம் செலுத்துவது ஆகிய பணிகளை, மருத்துவக்குழு செய்ய வேண்டும். இதை, மண்டல மருத்துவ அதிகாரி கண்காணிப்பார்.குடிசை பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அவர்களுக்கு தேவையான தொற்று தடுப்பு உபகரணங்கள் வழங்குதல் போன்ற பணிகளை, தன்னார்வலர்கள் வழியாக செய்ய வேண்டும்.இதை, சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் கண்காணிப்பர். மொத்த பணிகளை, மண்டல அதிகாரி ஒருங்கிணைத்து, உடனுக்குடன் மேல் அதிகாரிகளுக்கு அறிக்கையாக வழங்க வேண்டும்.தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான பொறுப்புகளை பிரித்து வழங்கியதால், குறிப்பிட்ட துறைக்கு பணிச்சுமை குறைவதுடன், பணிகளும் வேகமாக நடைபெறும் என, அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News