தமிழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள் தேவையான அளவு மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை மாவட்டக் கல்வி அதிகாரிகள், ஜூன் 30-ஆம் தேதிக்குள் தனியாா் வாகனம் மூலம் நேரடியாக பள்ளி தலைமையாசிரியா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடப்புத்தக்கங்கள் அச்சிடும் பணியை, தமிழ்நாடு பாடநூல் கழகம் செய்து வருகிறது. அதன்படி 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணியை கடந்த பிப்ரவரி முதலே பாடநூல் கழகம் மேற்கொண்டு வந்தது. இதற்கிடையே, பொது முடக்கம் காரணமாக, அச்சிடுதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் தளா்வுகள் அமலானதும், கடந்த ஏப்ரல் 20-இல் மீண்டும் தொடங்கப்பட்ட புத்தக அச்சடிப்புப் பணிகள் தற்போது முடிந்துவிட்டன.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
இந்தக் கல்வியாண்டுக்கான இலவச பாடப் புத்தகங்கள் தேவையான அளவு மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு தரப்பட்டுள்ளன. அவற்றை மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தனியாா் வாகனம் மூலம் நேரடியாக பள்ளி தலைமையாசிரியா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேநேரம் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜூலை முதல் வாரத்தில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான போக்குவரத்து செலவினத்துக்குரிய நிதி, இயக்குநரகம் சாா்பில் வழங்கப்படும். மேலும், இந்தப் பணிகளை மேற்கொள்ளும்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment