Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 6, 2020

ஊரடங்கால் குழந்தைகளுக்கு உடல்பருமன் பிரச்சனைகள்: ஆய்வில் தகவல்!

ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே இருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சனைகள் அதிகமாக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உணவுப் பழக்கம், தூங்கும் நேரம் என அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பதால் செல்போன், தொலைக்காட்சிதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சிலர் இந்த நேரத்தை பயன்படுத்தி உடற்பயிற்சி, சத்துள்ள உணவு, முறையான தூக்கம் என இருக்கின்றனர். ஆனால் பெரும்பாலானோரின் உணவுப் பழக்கம், தூங்கும் நேரம் மாறியுள்ளது என்பதே உண்மை. அவர்கள் மனதளவிலும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே இருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூயார்க்கில் உள்ள பஃப்லோ பல்கலைக்கழகம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டது.

வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் சாப்பிடுவதை விட கூடுதலாக ஒரு வேளை சாப்பிடுவதாகவும், தினமும் அதிக நேரம் தூங்குவதாகவும், சுமார் 5 மணி நேரம் செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர். நடை பயிற்சி, ஓடுதல் உள்ளிட்ட உடல் சார்ந்த இயக்கங்கள் அதிக அளவில் குறைந்துள்ளதால் உடல் பருமன் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளவும், தூங்கவும் பழகியிருப்பார்கள். தற்போது அந்த வாழ்க்கையில் இருந்து மாறி வந்துள்ளதால் மன அழுத்தம் மட்டுமல்லாமல் உடல் ரீதியிலான பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment