Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 7, 2020

நாளை முதல் ஓட்டல்கள் செயல்பட அனுமதி: விதிமுறைகளை பின்பற்ற கலெக்டர் அறிவுறுத்தல்


கோவை:தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், உணவகங்கள் நாளை முதல் செயல்பட, அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், கோவையில் முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.ஓட்டல் உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், 37 பிரிவுகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டன. இது குறித்து, கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு பதிலாக, 'பார்சல்' பெற்று செல்ல ஊக்குவிக்க வேண்டும். உணவு வினியோக பணியாளர்களை, பார்சல் கொண்டு செல்லும் முன்பு, 'தெர்மல் ஸ்கேனர்' முறையில், பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குளிர்சாதன வசதி பயன்படுத்தவும், பெரிய கூட்டங்கள், சபைகள் நடத்தவும் அனுமதியில்லை. முன்பு இருந்த எண்ணிக்கையில், 50 சதவீத அளவுக்கு மட்டுமே மேஜை, நாற்காலி இருக்க வேண்டும். கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள, நுழைவாயிலில் ஏற்பாடு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் வந்து செல்ல, தனித்தனி நுழைவாயில் பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சுவரொட்டிகளை, ஆங்காங்கே காட்சிப்படுத்த வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற, அளவான பணியாளர்களை நியமிக்க வேண்டும். வாகனம் நிறுத்துமிடத்தில் போதுமான இடைவெளி அவசியம். குடிநீர், கைகழுவும் இடம், கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை, பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். பணம் செலுத்துவதற்கு பதிலாக, டிஜிட்டல் முறையை ஊக்குவிக்க வேண்டும்.உணவுகொண்டு செல்லும் வாகனங்கள், கிருமிநாசினி கொண்டு முறையான கால இடைவெளியுடன் சுத்தம் செய்தல், பாத்திரங்களை சுடுநீரில் கழுவுதல், கைரேகை வருகை பதிவை தவிர்த்தல் பின்பற்ற வேண்டும்.

காய்கறியை சமைப்பதற்கு முன்பு, 50 பிபிஎம்., குளோரினேட் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும்.லிப்ட், கைப்பிடி, நாற்காலிகளை அடிக்கடி சுத்தம்செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களும் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். விதிமுறைகள் பின்பற்றாத ஓட்டல்களை, மூட நடவடிக்கை எடுக்கப்படும். உணவக செயல்பாடுகளை கண்காணிக்க, கள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment