பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தான் அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை இயக்குநர் கூறியுள்ளார்.
பொதுத்தேர்வு
கரோனா அச்சம் காரணமாக மார்ச் மாதம் நடைபெற வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திகைப்பட்டது. ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்ததன் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு படி 20 சதவீதமும் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பல தனியார் பள்ளிகளும் பெற்றோர்களிடம் பணம்பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை அதிகம் வழங்குவதாக குற்றம்சாட்டப்பட்டது. தனியார் பள்ளிகளின் நிலை இது எதுவென்றால், அரசுப் பள்ளிகளின் நிலையோ வேறு. தேர்வுத்துறை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க அரசுப்பள்ளிகளிடம் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கேட்டிருந்தது. அதன்படி மதிப்பெண் பட்டியல் தயாராகும் நிலையில், கிட்டதட்ட 50% மாணவர்கள் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை. அப்படியானால் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைவார்களா என்ற கேள்வி எழுந்தது.
இந்த குழப்பத்துக்கு முடிவு அளிக்கும் வகையில் தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள தேர்வுத்துறை இயக்குனர், "காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களும் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்." எனக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பும் படி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment