Friday, July 3, 2020

வீட்டில் முடங்கியுள்ள மாணவர்கள்; கவனச்சிதறலைத் தவிர்க்க தொலைக்காட்சி மூலம் கல்வி: உயர் நீதிமன்றத்தில் வழக்கு


கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள மாணவர்களுக்குக் கல்வியில் இருந்து கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சிகளை அளிக்கக் கோரி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இதன் விசாரணையை ஜூலை 6-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் அனைவரும் முடங்கியுள்ள நிலையில் மார்ச் மாதம் முதல் 100 நாட்களாகக் கல்வி பயிலும் வாய்ப்பின்றி மாணவர்கள் உள்ளனர். இதனால் அவர்கள் கவனம் கல்வியின் பக்கமிருந்து வேறு பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. ஆகவே, அவர்களைத் தொடர்ச்சியாக கல்வியின் பக்கம் வைத்திருக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சையது கலேஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். வீட்டில் முடங்கியுள்ள மாணவர்களின் கவனம் கல்வியில் இருந்து சிதற அதிக வாய்ப்புள்ளதால் இணையதள சேனல் மற்றும் தொலைக்காட்சி மூலமாகக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

அவரது மனுவில், 'பள்ளி மாணவர்கள் தங்களது முழு ஆண்டுத் தேர்வுகளை எழுதி முடிக்காத நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீட்டில் முடங்கி உள்ளதால், அவர்களுக்கு சுய ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புகளை வளர்க்கத் தேவையான கல்வி தற்போது கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் கரோனா தொற்றுப் பயத்தில் இருந்து விடுபட நாள்தோறும் தடையில்லா கல்வி அவசியம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 'ஸ்வயம் பிரபா' என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது என்பதையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் கல்வி, மாணவர்கள் கண் பாதிப்பு தொடர்பான வழக்குகளுடன் ஜூலை 6-ம் தேதி இதையும் சேர்த்து விசாரிப்பதாகக் கூறி நீதிபதிகள் வழக்கைத் தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News