Friday, July 3, 2020

தனியார் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பரிசீலித்து விளக்கமளிக்க வேண்டும்; உயர் நீதிமன்றம் உத்தரவு


தனியார் பள்ளி மாணவ - மாணவியரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு வரும் 8-ம் தேதி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரோனா ஊரடங்கு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கல்விக் கட்டணம் செலுத்தும்படி, பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ - மாணவிகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அடைக்கல அன்னை சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், அரசுப் பள்ளிகள் போல, தனியார் பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கெனவே கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து வரும் நிலையில், குழந்தைகளுடைய தொடர் கல்விக்கு அரசு கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற துறையினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டதுபோல, இந்த ஆண்டு மட்டும் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று (ஜூலை 3) விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக மனுதாரர், அரசிடம் கோரிக்கையைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு இது தொடர்பாகப் பரிசீலித்து ஜூலை 8-ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Source : www.hindutamil.in

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News