கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கோவில்கள் அனைத்தும் தற்போது மூடப்பட்டிருப்பதால் வீட்டில் இருந்தே ஸ்வாமி தரிசனத்தை பார்க்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடந்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ரூ.8,75 செலவில் திருக்கோயில் தொலைக்காட்சி முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதால் பிரசித்தி பெற்ற கோவில்களில் வீடியோ கிராபர்கள் மூலம் ஒளிப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடியோ காட்சிகள் ஒளிப்பதிவு செய்யும் பொது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், * கோயில் வளாகம், முகப்பு, விமானங்கள், கோபுரங்கள், கோயிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்கம் பதிவுகள் இடம்பெற வேண்டும்.
* கோயில் அமைவிட விவரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும்.
* கோயில் தல வரலாறு (பின்னணி வர்ணனை, தேவையான காட்சிகளுடன்)
* கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்கள் மிகவும் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும். (30 வினாடிகள்)
* கோயிலில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம்பெற வேண்டும். ஸ்ரீ கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், நடைபெறும் நேரம் தங்க ரதம் போன்றவற்றிற்கான கட்டண விபரங்கள், நடைபெறும் நேரங்கள் குறிப்பிட வேண்டும்.
* ஒளிப்பதிவுக் காட்சிகளில் கோயில் பணியாளர்கள் இடம்பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம்.
* ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும் பொழுது அவற்றின் முழுமையான உருவங்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.
* தலச்சிறப்பைச் சொல்லும்போதும் ஓதுவார்கள் பாடும் போதும் அவர்களது உருவத்தை கீழ் ஓரத்தில் அஞ்சல்வில்லை அளவில் காண்பித்தால் போதும். அந்த நேரத்தில் சிற்பங்கள் அல்லது கோயிலின் சிறப்பான பகுதிகளைக் காட்சிப்படுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும்.
* ஒரு கோயிலின் வீடியோ ஆவணப்படம் தயார் செய்யும் பொழுது அந்த கோயிலின் அனைத்து நிகழ்வுகளும் தொடர் நிகழ்ச்சிகளாக ஒரே சிடியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
* முதுநிலை கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் தயார் செய்யும் பொழுது அவற்றின் உபதிருக்கோயில்கள் குறித்த நிகழ்வுகளையும், சிறப்புகளையும் இடம்பெற செய்திடலாம்.
* மூலிகை ஓவியங்கள், புரதான கல்வெட்டுகள் இருந்தால் அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment