Wednesday, July 1, 2020

"ஐந்தாம்‌ வகுப்பு 'அ பிரிவு" - ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பற்றி பாடலாசிரியர் எழுதிய அருமையான கவிதை

மழை பெய்யாத நாட்களிலும்‌ |
மஞ்சள்‌ குடையோடு வரும்‌ !
திலகவதி டீச்சர்‌
வகுப்பின்‌ முதல்‌ ‌நாளன்று
முன்பொரு முறை
எங்களிடம்‌ கேட்டார்‌;
"படிச்சி முடிச்சதும்‌
என்ன ஆகப்‌ போறீங்க?” 

-முதல்பெஞ்ச்சை
யாருக்கும்‌ விட்டுத்ராத
கவிதாவும்‌ வனிதாவும்‌
“டாக்டர்‌' என்றார்கள்‌ கோரஸாக

இன்று கல்யாணம்‌ முடிந்து
குழந்தைகள்‌ பெற்று
ரேஷன்‌ கடை வரிசையில்‌ கவிதாவையும்‌;
கூந்தலில்‌ செருகிய சீப்புடன்‌
குழந்தைகளை பள்ளிக்கு
வழியனுப்பும்‌ வனிதாவையும்‌;
எப்போதாவது பார்க்க நேர்கிறது !

“இன்ஜினீயர்‌ ஆகப்‌ போகிறேன்‌” '
என்ற எல்‌.சுரேஷ்குமார்‌
பாதியில்‌ கோட்டடித்து
பட்டுத்தறி நெய்ய போய்‌ விட்டான்‌ !

“எங்க அப்பாவுடைய
இரும்புக்‌ கடையை பார்த்துப்பேன்‌ !''
கடைசி பெஞ்ச்சி என்‌.ராஜேஷ்‌ சொன்ன போது
எல்லோரும்‌ சிரித்தார்கள்‌.

இன்று அவன்‌ நியூஜெர்சியில்‌
மருத்துவராகப்‌ பணியாற்றிய படி
நுண்‌ உயிரியலை ஆராய்கிறான்‌ !

பிளைட் ஓடுவேன்
என்று சொல்லி
ஆச்சர்யங்களில்‌ எங்களைத்‌ தள்ளிய
அகஸ்டின்‌ செல்லபாபு
டி.என்‌.பி.எஸ்‌.சி. தேர்வெழுதி
கடைநிலை ஊழியனானான்‌ !

"அணு சக்தி விஞ்ஞானியாவேன்‌ !''
என்ற நான்‌
திரைப்படப்‌ பாடல்கள்‌ எழுதிக்‌ கொண்டிருக்கிறேன்‌

வாழ்க்கையின் காற்று
எல்லோரையும்‌ திசை மாற்றிப்‌ போட,
*“வாத்தியாராவேன்‌ !'' என்று சொன்ன
குண்டு சுரேஷ்‌ மட்டும்‌
நாங்கள்‌ படித்த அதே பள்ளியில்‌
ஆசிரியராகப்‌ பணியாற்றுகிறான்‌ !

“நெனச்ச வேலையே செய்யறே
எப்படியிருக்கு மாப்ளே?'" என்றேன்‌
சாக்பீஸ்‌ துகள்‌ படிந்த விரல்களால்‌
என்‌ கையைப்‌ பிடித்து;

“படிச்சி முடிச்சதும்‌
என்ன ஆகப்‌ போறீங்கன்னு
என்‌ மாணவர்களிடம்‌
நான்‌ கேட்பதே இல்லை!" என்றான்‌!

- ஐந்தாம்‌ வகுப்பு 'அ பிரிவு
நா.முத்துக்குமார்‌

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News