Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியை பைரவி, தனது சொந்த பணத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பில் ஏழை மாணவர்கள் 16 பேருக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்து இணையம் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியையும், கணித பட்டதாரி ஆசிரியையுமான பைரவி, 10 ஆம் வகுப்பு பயிலும் 16 மாணவர்களுக்கு தம்முடைய சொந்த பணம் ரூ. 1 லட்சம் செலவில் 4 ஜி ஸ்மார்ட் போன்கள் வாங்கிக் கொடுத்து மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பள்ளித் திட்டம் மூலம் மாணவர்களுக்கு இணையம் மூலம் பாடம் கற்பித்து வருகின்றனர். நடப்பு கல்விவியாண்டில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பலர், இத்திட்டத்தில் தொடர்ச்சியாக பங்கேற்கவில்லை. அவ்வாறு தொடர்ச்சியாக பங்கேற்காத மாணவர்களை அப்பள்ளியின் கணித ஆசிரியை பைரவி நேரில் சென்று சந்தித்து வீட்டிலிருந்தே பள்ளித் திட்டத்தில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து விசாரித்தார்.
அப்போது, ஸ்மார்ட் போன் வாங்க வசதி இல்லாத ஏழ்மை நிலையில் மாணவர்கள் பலரின் குடும்பச் சூழல் இருந்தது தெரியவந்தது. ஏழ்மை, கல்வி கற்க தடையாக இருக்கக் கூடாது என கருதிய ஆசிரியை பைரவி, கல்வி கற்க வசதியாக ஸ்மார்ட் போன் வாங்க இயலாத மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ஸ்மார்ட் போன் வாங்கித் தர முடிவு செய்தார். ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் குறித்த விவரங்களை திரட்டினார். 16 பேர் கொண்ட பட்டியல் தயாரானது. ஆசிரியர் தின விழாவில் அவர்களுக்கு இணைய வசதி இணைப்புடன் கூடிய 4ஜி ஸ்மார்ட் போன்களை இலவசமாக வழங்கினார்.
இதுகுறித்து ஆசிரியை பைரவி கூறியதாவது:
கரோனா பொது முடக்கத்தால் வகுப்புகளுக்கு நேரில் வரமுடியாத 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போன் மூலம் நடைபெறும் வகுப்பு மிகவும் அவசியமானது. கணித பாடம் பயில்வதற்கு மாணவர்களின் சுணக்கம் இல்லாத தொடர்ச்சியான பங்கேற்பு மிக முக்கியம். ஏழ்மை காரணமாக பலரால் கல்வி கற்க ஸ்மார்ட் போன் வாங்க முடியவில்லை. கல்வி கற்க ஏழ்மை ஒரு தடையாக இருக்ககூடாது என விரும்பிய நான், எனது சொந்த பணத்தில் இருந்து ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுக்க முடிவு செய்தேன். கரோனா பொது முடக்கம் முடிந்து பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் வரை, மாணவர்களுக்கு வழங்கிய ஸ்மார்ட் போன்களுக்கு நான் தொடர்ந்து ரீசார்ஜ் செய்து தரவும் முடிவு செய்துள்ளேன்.
வீட்டில் இருந்தே பள்ளி என்ற அரசின் திட்டத்தைச் சரியாக பயன்படுத்திக் கொண்டு, இந்த செல்லிடப்பேசியை கல்வி செயல்பாடுகளுக்கு மட்டும் மாணவர்கள் பிரத்யேகமாக பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் போன் தேவைப்படும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆசிரியை பைரவி.
IMPORTANT LINKS
Wednesday, September 9, 2020
Home
கல்விச்செய்திகள்
ரூ. 1 லட்சம் மதிப்பில் ஏழை மாணவர்கள் 16 பேருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியை
ரூ. 1 லட்சம் மதிப்பில் ஏழை மாணவர்கள் 16 பேருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியை
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment