Join THAMIZHKADAL WhatsApp Groups
மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி இடம் ஒதுக்க கோரிய, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவனின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகாவை சேர்ந்த, சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனு:என் மகன் சுரேந்தர், ௮ம் வகுப்பு வரை, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தான். பின், பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்தான். பிளஸ் 2 தேர்வில், 457 மதிப்பெண்; 'நீட்' தேர்வில், 239 மதிப்பெண் எடுத்துள்ளான்.மருத்துவ படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சதவீத அடிப்படையில் வெளியிடப்பட்ட வரிசைப் பட்டியலில், என் மகன், 54வது வரிசையில் உள்ளான். அரசு பள்ளி மாணவர்கள், 300 பேருக்கு, மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்பதால், என் மகனுக்கு உறுதியாக கிடைக்கும். அவன், 8ம் வகுப்பு வரை, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால், தகுதி சான்றிதழ் கிடைக்கவில்லை.
கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள ஏதுவாக, தகுதி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்க, அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும். மருத்துவ படிப்புக்கு, என் மகனை பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. கல்வித் துறை சார்பில், சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, ''அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்துள்ளதால், தகுதி சான்றிதழ் வழங்க முடியாது. அரசு வழங்கும், 7.5 சதவீத ஒதுக்கீடு சலுகையையும் பெற முடியாது,'' என்றார்இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment