Join THAMIZHKADAL WhatsApp Groups
மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை ஆன்லைனில் நடத்த முடியாதது ஏன் என்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (நவ. 12) செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் எப்போது தொடங்கப்படும்? அதற்கான தரவரிசைப் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?
மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுதான். விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கெனவே அனுப்பப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் எங்களின் தேர்வுக் குழுவுக்கு மெயில் அனுப்பினால் போதும். அவை திருத்தப்பட்டுவிடும். சிறிய தவறுகளுக்காக அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட மாட்டாது.
இதுவரை 34 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை தமிழகத்தில் 4,061 மருத்துவ இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
திட்டமிட்டபடி தரவரிசைப் பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிடப்படும். ஓரிரு நாட்களில் கவுன்சிலிங் தொடங்கப்படும். முதலில் சிறப்பு மாணவர்களுக்காகவும் பின்னர் 7.5% இட ஒதுக்கீட்டின்படியும் கவுன்சிலிங் நடைபெறும்.
மருத்துவக் கவுன்சிலிங்கை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே?
ஆண்டுதோறும் மருத்துவக் கவுன்சிலிங் நேரடியாகத்தான் நடைபெறும். இது, மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். எந்தக் கல்லூரியில் சேருகிறார்கள் என்பதை, அதற்கான உரிய வழிகாட்டுதல்களுடன் நேரடியாக வழங்குவதே ஏற்புடையதாக இருக்கும்.
தொற்றுக்காலமாக இருப்பதால், உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கம் போன்ற பெரிய இடங்களில் கவுன்சிலிங் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்றவை கடைப்பிடிக்கப்படும். திட்டமிடப்பட்ட எண்ணிக்கையிலேயே நபர்கள் வருவார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதால், அவர்களும் நேரடியாக வருவதே சிறப்பாக இருக்கும். கடந்த முறை ஆள்மாறாட்டம் போன்ற விமர்சனங்கள் எழுந்தன. அப்படியான எந்த விஷயங்களும் இனி நடக்காது. இம்முறை அனைத்துச் சான்றிதழ்களையும் நேரடியாக சோதிக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 500 பேர் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
7.5% இடஒதுக்கீட்டின்படி, அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேருக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கும்?
இதுவரை எம்பிபிஎஸ் இடங்களைப் பொறுத்தவரை 304 மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்கும். கடைசி நேரத்தில் எண்ணிக்கை கூடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. பிடிஎஸ் படிப்பில் 91 பேருக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment