தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழகத்தில் எட்டு மண்டலங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குத் துணைவேந்தர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் விவரங்களைப் பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்தபின், அவர்களுடைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
கரோனா தொற்றுக்கு முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த 7 மாதங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவில்லை. தற்பொழுது தொற்று குறைந்து வருவதால், ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள எட்டு மண்டலங்களிலும் வேலைவாய்ப்பு நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். கடந்த முறை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டதில், 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலை கிடைத்தது'' என்று துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment