புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் புதுச்சேரி அரசே ஏற்கும் என்ற திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கிட்டத்தட்ட 11 மாதங்களுக்குப் பிறகு நேற்று இரவு ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளின் முழுக் கல்விக் கட்டணத்தையும் புதுச்சேரி அரசு ஏற்கும் என்று கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்துக் கடந்த ஆண்டு டிசம்பர் 16, நடப்பாண்டு ஜனவரி 13-ம் தேதிகளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி முடிவெடுக்கப்பட்டு அதற்கான திட்டம் ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அத்திட்டத்திற்க்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கினார்.
இதுதொடர்பாக ராஜ்நிவாஸ் கூறுகையில், தகுதி வாய்ந்த எஸ்சி, எஸ்டி குழந்தைகளுக்குக் கல்விக்கட்டணம், டியூஷன் கட்டணம், தேர்வுக் கட்டணம், ஆய்வகக் கட்டணம், புத்தகம் மற்றும் சீருடைக் கட்டணம் உள்ளிட்டவை செலுத்தப்படும். அதில் பேருந்து கட்டணம், உணவிற்கான (மெஸ்) கட்டணம், நன்கொடைக் கட்டணம் ஆகியவை இடம் பெறாது. தகுதியுடைய குழந்தைகள் கல்வி பயிலும் நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகப் பணம்செலுத்தப்படும்.
அத்துடன் அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகளை, மாணவர்கள் தேர்வு செய்து படிக்கவும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தற்போதுள்ள திட்டங்களுக்கு மீண்டும் முன்னுரிமை அளிப்பதன் மூலம் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்குப் போதுமான நிதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இத்திட்டத்தால் மொத்தம் 6,777 எஸ்சி, எஸ்டி குழந்தைகள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேவையில்லாத காரணம் கூறி இத்திட்டத்தைத் தாமதப்படுத்தினார். இத்திட்டத்துக்கான நிதி ஆதிதிராவிட நல சிறப்புக்கூறு நிதியில் தரப்படும் என்று முடிவு எடுத்த பிறகும் ஆளுநர் கிரண்பேடி தாமதம் செய்துள்ளார். இக்கோப்புக்கு இன்று ஒப்புதல் கிடைத்துள்ளதால் விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, இக்கல்வியாண்டு முதலே இத்திட்டம் அமலாகும் என கூறப்படுகிறது.
இதனால் புதுச்சேரியில் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகள், 2 பல் மருத்துவக் கல்லூரிகள், 10 மருத்துவம் சார்ந்த படிப்புக்கான கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 19 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 2 தொழில்நுட்பக் கல்லூரிகள் 11 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியினக் குழந்தைகளின் முழுக் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment