Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 31, 2020

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெறுக: மு.க.ஸ்டாலின்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
முதல்வர் பழனிசாமியின் வாக்குறுதியை நம்பி போராட்டத்தைக் கைவிட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதே ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை என்றும், அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து விட்டு, மீண்டும் வெகு நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வைத்துப் போராடிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினைச் சேர்ந்த ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை இதுவரை ரத்து செய்யாமல் இருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் பலனில்லாததால் - 22.1.2019 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடங்கினார்கள். அப்போது - பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, அரசு ஊழியர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தரம் தாழ்ந்த காரியத்தை மட்டுமே அ.தி.மு.க. ஆட்சி செய்தது. இந்நிலையில், "வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் பழனிசாமி, உள்ளே நஞ்சை வைத்து வெளியே நயமாக, வேண்டுகோள் விடுத்தார். ஆனால் வேலை நிறுத்தத்தை விலக்கிக்கொண்டு கொரோனா காலத்திலும் மக்களுக்காக அயராது பணியாற்றி வரும் 5,068 ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு 17(பி)-யின் கீழ் குற்றக் குறிப்பாணைகள் வழங்கி பேரின்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது.

"போராட்டத்தைத் திரும்பப் பெறுங்கள்" என்று ஒரு முதல்வரே வேண்டுகோள் விடுத்து, அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, அவர்கள் மீதே ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை. இது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை; பணி ஓய்வும் கிடைக்கவில்லை. பணி ஓய்வுக்குப் பின் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. ஏன், அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கூட கிடைக்கவில்லை.

ஆசிரியர்களையும் - அரசு ஊழியர்களையும், அடுக்கடுக்காகத் தொடர்ந்து இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி, முதல்வர் பழனிசாமி எதைச் சாதிக்கப் போகிறார்? அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி, போராட்டத்தை விலக்கிக் கொண்ட அரசு ஊழியர்களை முதுகில் குத்தி இப்படி துரோகம் இழைத்துக் கொடுமைப்படுத்துவது மன்னிக்க முடியாத மாபாதகம்.

எனவே, கொரோனா பேரிடருக்காக தங்களின் ஒருநாள் ஊதியமாக 150 கோடி ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதிக்காக அளித்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான உணர்வினை கொச்சைப்படுத்தி நிந்திக்காமல், ஏற்கெனவே வாக்குறுதி அளித்தவாறு, 5068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News