Join THAMIZHKADAL WhatsApp Groups
தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகள் நேராமல் இருப்பதற்காகவும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
* தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்குச் செல்ல வேண்டும். இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு, தேர்வு தொடங்கப்படும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.
* விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை கொண்ட பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* விடைத்தாளில் உரிய இரு இடங்களில் கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையைப் பதிக்க வேண்டும். அப்போது பிற இடங்களில் மை படாமலும், விடைத்தாள் சேதமடையாமல் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.
* வினாத்தாள் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் (E) என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.
* விடைத்தாளில் (A), (B), (C), (D) மற்றும் (E) என ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணி, மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பிக் கருமையாக்க வேண்டும். தவறினால் 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்தச் செயலை மேற்கொள்ளத் தேர்வு முடிந்த பிறகு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
* தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகளும் நேராமல் இருப்பதற்காகவும் தேர்வாணையம் மேற்குறிப்பிட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது''.
No comments:
Post a Comment