ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பு ( JACTTO - GEO ) கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாகப் போராடி வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கூட்டமைப்பு காலவரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது . அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 5068 பேர் மீது நடத்தை விதிகள் - 17 ( பி ) பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான குறிப்பாணைகளைப் பிறப்பித்திருக்கிறது.
இது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். இந்த குறிப்பாணைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பணிஓய்வு பெற்ற 40 க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குரிய ஓய்வூதிய பயன்களைப் பெற இயலவில்லை .
பணிக்காலம் முடிந்து விட்டது என்றாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் பணிஓய்வைப் பெறமுடியவில்லை . இதனால் அவர்களும் அவர்கள் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும் உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். ஆகவே , தமிழக அரசு 5068 பேர் மீதும் பதிவு செய்திருக்கிற குற்றக் குறிப்பாணைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
அத்துடன் , மிகவும் முதன்மையான கோரிக்கையானது ' பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை'த் தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதாகும். மைய அரசு இத்திட்டத்தை வரையறுத்திருக்கிறது என்றாலும் , இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கின்றன . குறிப்பாக , மேற்குவங்க மாநில அரசு , மைய அரசின் பங்களிப்பு -1 ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.
அதேபோல தமிழக அரசும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ( சிபிஎஸ் ) நடைமுறைப்படுத்த வேண்டாமென இந்த கூட்டமைப்பு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனவே , தமிழக அரசு இதில் பிடிவாதம் காட்டாமல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இல்லை என்கிற நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது .
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்துக்கட்சி அரசியல் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து தமது கோரிக்கைகளை விளக்கி ஆதரவு கோரி வருகின்றனர்.
அந்தவகையில் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் திசம்பர் -28 அன்று நேரில் வந்து சந்தித்து தங்களின் கோரிக்கை குறித்து விளக்கம் அளித்தனர்.
குறிப்பாக , அவர்கள் நடத்திய போராட்டத்தின்போது பலர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு , பொய்வழக்குகளுக்கு ஆட்பட்டு பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் என்பதைக் குறிப்பிட்டனர். இது கண்டத்துக்குரியதாகும். அவர்கள் மீதான வழக்குகளைத் தமிழக அரசு நிபந்தனையின்றி திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்தக் கூட்டமைப்பின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் உள்ளிட்ட 42 பேருக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் , இன்னும் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே , அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
No comments:
Post a Comment