கல்வி, 'டிவி' நிகழ்ச்சிகளுக்கு, சர்ச்சைக்குரிய அம்சங்கள் இல்லாமல், வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொற்று பரவல் காரணமாக, மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள், 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்துகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு, தமிழக அரசின் கல்வி, 'டிவி' வழியாக, வீடியோ பாடங்கள் ஒளிபரப்பாகின்றன. இந்நிலையில், ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்துக்கான வீடியோ, சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பானது. அதில், திருவள்ளுவர் காவி உடை அணிந்திருக்கும் காட்சி இடம் பெற்றது. இதற்கு, சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அனைத்து மதத்தினருக்கும் பொதுவான திருவள்ளுவரை, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பது போல, சித்தரிக்க முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அனைத்து மாவட்ட வீடியோ பாடத் தயாரிப்பு ஆசிரியர்களுக்கும், பள்ளி கல்வி இயக்குனரகம், சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.அதன் விபரம்:வீடியோ பாடங்கள் தயாரிக்கும் போது, சர்ச்சைக்குரிய அம்சங்கள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கவனக் குறைவாகவோ, வேண்டுமென்றோ, தேவையற்ற அம்சங்களை இடம்பெற செய்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தகத்தில் உள்ளபடி மட்டுமே பாடங்களையும், படங்களையும் பயன்படுத்த வேண்டும். தங்கள் விருப்பத்துக்கு படங்களையோ, பாட அம்சங்களையோ, 'டிவி' நிகழ்ச்சிக்கு பயன்படுத்தக் கூடாது. வீடியோக்கள் தயாரித்தபின், உயர் அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும்.இவ்வாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment