Join THAMIZHKADAL WhatsApp Groups
7 ஏக்கரில் 495 மாணவர்களுக்காக 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுடன் இயங்கி வருகிறது அந்த மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி. நகரத்துக்கு இணையான தரத்தில் இந்த கிராமப்புறப் பள்ளி இயங்கி வருவதாகப் பெருமையுடன் சொல்கிறார்கள் அங்கு குழந்தைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள்.
அங்கு 5-வது வரை படிக்கும் மாணவர்களுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.17 ஆயிரம். இரண்டு ஆண்டுகளாக அந்தக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனாலும், கற்பித்தல் செயல்பாடுகள் தடையின்றித் தொடர்கின்றன. பெற்றோர் கட்டணம் செலுத்த முடியாத காரணத்துக்காக ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை அனுமதிக்காத, மாற்றுச் சான்றிதழை வழங்காத தனியார் பள்ளிகளுக்கு மத்தியில், கடனோடு கல்வி நிலையத்தை நடத்திக் கொண்டிருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டம், அலஞ்சிரங்காடு கிராமத்தில் இயங்கி வரும் குருகுலம் தொடக்கப் பள்ளியின் தாளாளர் சிவனேசன்.
கரோனா காலத்தில் அதிக பாதிப்பைச் சந்தித்தவற்றில் கல்வி நிலையங்கள் முக்கியமானவை. ஓராண்டுக்கும் மேலாக அவை திறக்கப்படாததால் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் பலரும் 100 நாள் வேலை, கூலி வேலை, பெயிண்டர் வேலை, தள்ளுவண்டியில் பொருட்கள் விற்பது உள்ளிட்ட பணிகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் பெற்றோரிடம் கட்டணம் வாங்காமல், எப்படிக் கற்பித்தலை நிகழ்த்துகிறது சிவனேசனின் பள்ளி?
இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் அவரிடமே பேசினோம்.
''அப்பா கூலித் தொழிலாளி. கேட்டரிங் படித்ததால் கிடைத்த வெளிநாட்டு வேலையைப் பயன்படுத்தி, 9 ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்தேன். அப்போது நன்றாகச் சம்பாதித்தபோதும் எங்கள் கிராமத்துக்கும் சுற்றியுள்ள 20 ஊர்களுக்கும் சிறப்பான கல்வி கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அவர்கள் தனியார் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.
பரத நாட்டியம், கராத்தே, சிலம்பம் கட்டாயம்
அங்கு மருத்துவர், பொறியாளர், அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு மத்தியில் எங்கள் குழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்குமா என்று தெரியவில்லை. அதனால் அவர்களுக்காகவே பள்ளி தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். பி.ஏ. ஆங்கிலம், பி.எட். முடித்த கையோடு எம்பிஏ கல்வி மேலாண்மையும் முடித்து 2015-ல் இந்தப் பள்ளியைத் தொடங்கினேன். பள்ளிகளில் கற்பித்தல் தாண்டி, மாணவிகளுக்கு பரத நாட்டியமும், மாணவர்களுக்கு கராத்தே, சிலம்பமும் கட்டாயம். இதைத் தாண்டி விளையாட்டுப் போட்டிகளிலும் எங்கள் பள்ளி ஏராளமான பரிசுகளைக் குவித்திருக்கிறது.
கரோனா காலம் என்பதால் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் அவர்களிடம் போன், லேப்டாப் பார்க்கக்கூடாது என்று சொல்லித்தான் வளர்த்தோம். என் பிள்ளைகள் போனையே தொடமாட்டார்கள். நானே அவர்களிடம் போனைக் கொடுத்து 3, 4 மணி நேரம் வகுப்பில் உட்கார் என்று சொல்வது, மனசாட்சியை உறுத்தியது. என் மனதுக்கு ஒவ்வாத ஒன்றைச் செய்து நான் பெற்றோர்களிடம் எப்படிக் கட்டணம் கேட்பது?
ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்று
ஆன்லைன் வகுப்புகளுக்கென மாற்று வழி யோசித்தேன். கடந்த ஆண்டு ஊரடங்கில் அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப பயிற்சித் தாள்களை வழங்கி எழுத, படிக்கவைத்தோம். அதில் ஓரளவு திருப்தி ஏற்பட்டது. ஆனால், அதில் மாணவர்கள் நிறைய சந்தேகம் கேட்பதாகவும் அவற்றைச் சொல்லிக் கொடுக்கத் தங்களுக்கு நேரமில்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர். அதிகாலையில் கிளம்பிப் போய், உழைத்துக் களைத்து பொழுது சாயும்போது திரும்பும் கிராமப்புற மக்கள் அவர்கள்.
அதனால் சுற்றியுள்ள 20 கிராமங்களில் இருந்து படிக்கும் குழந்தைகளுக்கு, அந்தந்த கிராமத்திலேயே இருக்கும் ஆசிரியர்கள் மூலம் தனித்தனியே நேரடியாகக் கற்பிக்க ஆரம்பித்தோம். இதன் மூலம் குறைந்தபட்சக் கற்றல் உறுதி செய்யப்படுகிறது'' என்கிறார் சிவனேசன்.
ஓரிடத்தில் குழந்தைகளை ஒன்றிணைத்துக் கற்பிப்பது கரோனா பரவலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடாதா என்ற அச்சம் நம்மைப் போலவே அவருக்கும் எழுந்திருக்கிறது. இதனால் முழு ஊரடங்கின்போது கற்பித்தல் செயல்பாடுகளை சிவனேசன் நடத்தவில்லை. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தனிமனித இடைவெளியுடன் குருகுலம் பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதற்கும் அவர் கல்விக் கட்டணம் வசூலிக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்தச் செயல்பாடுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இதற்கு நல்ல பலன் இருப்பதாகவும் சிவனேசன் தெரிவிக்கிறார்.
ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கப் பணம் வேண்டுமே என்று யோசித்தவர், என்ன செய்தார்? அவரே சொல்கிறார். ''இந்தச் சூழலில் பெற்றோரிடம் பணம் வாங்க மனது உறுத்தியது. அதனால் விருப்பமுள்ள பெற்றோர்கள் குழந்தையின் கல்விக்காக மாதந்தோறும் ரூ.100 முதல் ரூ.200 வரை ஆசிரியர்களுக்கு வழங்கலாம் என்று தெரிவித்தேன். இதனால் வாய்ப்புள்ள பெற்றோர், ஆசிரியருக்கு நேரடியாக ஒரு சிறிய தொகையை அளித்துவிடுகின்றனர்.
நடிகர்கள் விவேக் இறந்தபோது நடப்பட்ட 20 மரக்கன்றுகளுக்கு, சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க உதவும் மாணவர்கள்
இரண்டு ஆயாம்மாக்கள் விவசாய, வீட்டு வேலைக்குச் செல்கிறார்கள். உடற்கல்வி ஆசிரியர் பெயிண்டர் வேலைக்குச் சென்றுவிட்டார். நான் மட்டும் தினந்தோறும் பள்ளிக்கு வந்து, உட்கார்ந்து மாலை திரும்பிச் செல்கிறேன். பள்ளியில் உள்ள 1000 மரக்கன்றுகளைப் பராமரிக்க மட்டும் ஓர் ஆயா வந்து செல்கிறார். இப்போதும் தினந்தோறும் 10 கன்றுகள் வீதம் 15 நாட்களாக நட்டு வருகிறேன். ஆயாம்மாவுக்கு ஊதிய பாக்கி நிலுவையில் இருந்தாலும் 6 ஆண்டுகளாக உடனிருப்பதால், இங்கேயே இருக்கிறார்'' என்று புன்னகைக்கிறார் சிவனேசன்.
எப்படி இந்தச் சூழலைச் சமாளிக்க முடிகிறது என்று கேட்டதற்கு, ''பள்ளி தொடங்கியதில் இருந்து நிறைய ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்துவிட்டேன். கஜா புயலின்போது பள்ளி நிறைய அடிவாங்கியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டபோது சுமார் ரூ.36 லட்சம் கட்டணம் பெற்றோரிடம் வசூலிக்க முடியாமல் இருந்தது. 17 முறை வக்கீல் நோட்டீஸுக்குப் பிறகு, லோனில் வாங்கிய பள்ளி வாகனங்களைக் கைப்பற்றவும் ஆணை வந்துள்ளது.
ரூ.1 கோடிக்கு மேல் கடன்
இதற்கிடையே மின்சாரக் கட்டணம், பள்ளியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பு ஆகியவற்றுக்கான தேவையும் உள்ளது. இதனால் தற்போது பள்ளிக்கு ரூ.1 கோடிக்கு மேல் கடன் இருக்கிறது. ஆரம்பத்தில் மனைவியின் நகைகளை அடகுவைத்து ரூ.6 லட்சம் புரட்டி, ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை 3 மாதங்களுக்குச் சமாளித்தேன். இப்போது அதற்கும் வழியில்லை. ஆனால் இந்தச் சுமைகளை எந்த வகையிலும் பெற்றோரிடம் திணிக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன்.
எங்கள் ஊர் மற்றும் அருகாமைப் பகுதிகளில் சிங்கப்பூர், மலேசியா என வெளிநாட்டில் வசித்த ஆண்கள் பெரும்பாலானோர், கரோனா காரணமாக நாடு திரும்பி இருக்கின்றனர். ஏற்கெனவே கடன் வாங்கி வீடு கட்டியவர், விவசாயத்தில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இப்போது வேலையிழந்து தவிக்கிறார்கள். இத்தகைய பெற்றோர்கள் எங்கள் பள்ளியில் 100-க்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். அவர்களிடம் பேசி, கட்டணம் வாங்குவதில் உடன்பாடில்லை'' என்கிறார் சிவனேசன்.
பள்ளி தாண்டியும் தனது செயல்பாடுகளை விரித்திருக்கிறார் சிவனேசன். கடந்த ஆண்டு 7.5% இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள் 25 பேருக்கும் ஸ்போக்கன் இங்லீஷ் கற்றுக்கொடுத்தவர், பள்ளிக்கு வெளியிலும் சூழலியல் காக்க, மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.
இன்னலில் மாணவர் நலன்சார் தனியார் பள்ளிகள்
தனியார் பள்ளிகள் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கும் அவர், ''எங்கள் பள்ளி மட்டுமல்ல கிராமப்புற, மாணவர் நலன் சார்ந்து செயல்பட்டு வரும் ஏராளமான தனியார் பள்ளிகள் கரோனா காலத்தில் இன்னலில் இருக்கின்றன. இப்போதும் எல்கேஜி ஆன்லைன் வகுப்புக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்தான் கண்டிக்கப்படவுவும் தண்டிக்கப்படவும் வேண்டியவர்கள். மனசாட்சி இல்லாமல் நடப்பது அவர்கள்தான்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தைக் கொடுத்தால் கூட, எங்களைப் போன்ற தனியார் பள்ளிகள் சற்றே மூச்சு விட முடியும்'' என்று முடிக்கிறார் சிவனேசன்.
No comments:
Post a Comment