Join THAMIZHKADAL WhatsApp Groups
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்புப் பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கவும், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலரின் அறிவுரைகளின்படி, இன்று (18ம் தேதி) முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் உயர்தர தொழில்நுட்ப ஆய்வகம் (Hi Tech Lab) மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 9 மற்றும் 10ம் வகுப்புகளின் கற்றல் விளைவுகளின் அடிப்படையில், வினாடி வினா நடத்தத் திட்டமிட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் 5 பலவுள் தெரிவு வினாக்களும், 5 இலக்கணம் மற்றும் மொழி அறிவு சார்ந்த பலவுள் தெரிவு வினாக்களும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலிருந்து 10 பலவுள் தெரிவு வினாக்களும் கேட்கப்படும்.
அனைத்து தலைமை ஆசிரியர்களும் இந்த வினாடி வினாப் போட்டியை ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் உயர்தர தொழில்நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு குழுவினருக்கும், மாணவர் எமிஸ் லாகின் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி 1 மணி 30 நிமிடம் கால அவகாசம் அளித்து நடத்த வேண்டும்.
இச்செயல்பாட்டினை சனிக்கிழமையன்று முடிக்க இயலாத நிலையில் அடுத்து வரும் செவ்வாய்க் கிழமையன்றும் நடத்தி முடிக்க வேண்டும். இத்தேர்வு முடிந்தவுடன் அடுத்த பள்ளி வேலை நாளில், நடந்து முடிந்த போட்டிக்கான வினா - விடைகள் முதன்மைக் கல்வி அலுவலர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதனை, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனுப்பிவைத்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் வினாடி வினா போட்டிக்கான விடைகளை மாணவர்களிடம் கலந்துரையாட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment