ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார் மற்றும் துறை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
இதில், தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்,தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:
அதிக அளவில் ஆசிரியர்களைநியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. அவற்றில் 50 சதவீத கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்து கோரிக்கைகளையும் தொகுத்து, முதல்வரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். முதல்வரின் அறிவுறுத்தல்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்ட அளவிலான பிரச்சினைகளுக்கு அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளே தீர்வுகாண வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதன்மைக் கல்வி அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும்.
பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியை மீண்டும் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment